×

செங்கோட்டை வன்முறை வழக்கில் கைது: நடிகர் தீப்சித்துவுக்கு மேலும் 7 நாள் போலீஸ் காவல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: செங்கோட்டை வன்முறை வழக்கில் நடிகர் தீப்சித்துவுக்கு மேலும் 7 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தின் ஒருபகுதியாக ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது போலீசார் அனுமதி அளித்த 3 வழித்தடங்களை விட்டு செங்கோட்டை நோக்கி ஒரு குழுவினர் பேரணி சென்றனர். அங்கு தேசியக்கொடி ஏற்றப்பட்ட இடத்தில் சீக்கிய மதக்கொடியை ஏற்றினர். இதை தடுத்த போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு விவசாயி பலியானார். 500க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து டெல்லி சிறப்பு காவல்படை போலிசார் விசாரித்து வருகிறார்கள்.

இந்த வழக்கில் நடிகர் தீப்சித்துவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. விவசாயிகளை அவர் தூண்டி விட்டதாக போலீசார் சந்தேகித்தனர். அதன் அடிப்படையில் தலைமறைவாக இருந்த அவரை பிப்.9ம் தேதி கைது செய்தனர். அவரை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் பகுஜாலி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது 7 நாள் போலீஸ் காவலில்வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. விசாரணை காலம் முடிந்ததும் நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அந்த நேரத்தில் போலீசார் சார்பில் ஒரு மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்,’ நடிகர் தீப்சித்துவை மேலும் விசாரிக்க வேண்டியது உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை அவர்தான் அடையாளம் காட்ட வேண்டும். ஏனெனில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி தீப்சித்துதான். அவர் இடம் பெற்ற பல்வேறு வீடியோ ஆதாரங்கள் போலீசார் கையில் உள்ளன. அவர் கூட்டத்தை தூண்டிவிட்டார். மேலும் வன்முறை செய்தவர்களில் முக்கிய நபர் அவர்தான். இதுதொடர்பாக பல சமூக வலைத்தளங்களை ஆராய வேண்டியது உள்ளது.

அவர் தனது நிரந்தர முகவரியாக நாக்பூர் நகரை கொடுத்துள்ளார். ஆனால் பஞ்சாப், அரியானாவில் அவருக்கு பல இடங்கள் சொந்தமாக உள்ளன. அதுபற்றியும் விசாரிக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக செங்கோட்டையில் சீக்கிய மதக்கொடியை ஏற்றிவிட்டு வந்த நபருடன் இவர் காணப்பட்டார். அவரை பாராட்டினார். மேலும் அவர் அங்கு பேசிய பேச்சால் கூட்டத்தினர் கொந்தளித்தனர். அவர் கூட்டத்தை தூண்டி விட்டார். அதனால்தான் வன்முறை நடந்தது. இதில் பலர் காயம் அடைந்தனர்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. போலீசாரின் குற்றச்சாட்டுகளை நடிகர் தீப்சித்து சார்பில் ஆஜரான வக்கீல் மறுத்தார். அவர் கூறும்போது,’ வன்முறை நடந்த போது நடிகர் தீப்சித்து எதுவும் செய்யவில்லை. அவர் தவறான இடத்தில், தவறான நேரத்தில் இருந்ததுதான்பிரச்னையாகி விட்டது’ என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் பகுஜாலி, போலீசாரின் வேண்டுகோளை ஏற்று நடிகர் தீப்சித்துவுக்கு மேலும் 7 நாள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டார்.



Tags : Red Fort ,Actor Deepshithu , Red Fort violence case: Actor Deepshithu remanded in police custody for 7 more days: Court orders action
× RELATED செங்கோட்டை அருகே அரசுப் பேருந்தில்...