×

மணியாச்சி அருகே தறிகெட்டு ஓடிய லோடு ஆட்டோ ஓடையில் கவிழ்ந்து 5 பெண்கள் பலி

ஓட்டப்பிடாரம்: நெல்லை மாவட்டம், சீவலப்பேரி அடுத்த மணப்படை வீடு, திருமலைக்கொழுந்துபுரம், மணல்காடு கிராமங்களைச் சேர்ந்த விவசாய பெண் தொழிலாளர்கள்  31 பேர், நேற்று காலை ஒரு லோடு ஆட்டோவில் உளுந்து பறிக்கும் பணிக்கு சென்று கொண்டிருந்தனர். லோடு ஆட்டோவை திருமலைக்கொழுந்துபுரத்தைச் சேர்ந்த சித்திரை (55) என்பவர் ஓட்டினார். மணியாச்சி காவல்நிலையம் அருகே  ‘எஸ்’  போன்ற வளைவில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த லோடு ஆட்டோ, சாலையோர ஓடையில் தலைகீழாக  கவிழ்ந்தது. லோடு ஆட்டோவில் இருந்தவர்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து, இடிபாடுகளில் சிக்கியும், கால்வாய் தண்ணீரில் விழுந்தும் அலறினர். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வந்து பொக்லைன் இயந்திரம் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதற்குள் மணப்படை வீடு அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த பேச்சியம்மாள் (30), ஈஸ்வரி (27), மலையரசி (48), மற்ெறாரு பேச்சியம்மாள் (54), கோமதி (65) ஆகிய 5 பேர் அங்கேயே உயிரிழந்தனர். இதில் ஒருவர் கர்ப்பிணி எனக் கூறப்படுகிறது. படுகாயமடைந்த 21 பேரை மீட்டு ஆம்புலன்ஸ்களில் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். தலா ரூ.1 லட்சம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் முதல்வர் நிவாரணநிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின் இரங்கல்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூல் பக்கத்தில் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், சாலை பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்படும் நிலையில் பாதுகாப்பற்ற பயணங்களை மேற்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்படும் ஏழை தொழிலாளர்களின் அவல நிலை தொடர்கிறது’ என வேதனை தெரிவித்துள்ளார்.


Tags : women ,Maniyachi ,stream , Maniachchi, accident
× RELATED கள்ளழகர் திருவிழாவில் நகை திருட்டு: 5 பெண்கள் கைது