நாட்டில் ஹிட்லர் ஆட்சி நடக்கிறதா? அயோத்தி ராமர் கோயிலுக்கு நிதி தராத வீடுகளில் குறியீடு: முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டுக்கு கடும் எதிர்ப்பு

பெங்களூரு: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி தராத வீடுகளுக்கு ரெட்மார்க் குறியீடு போடப்பட்டு வருகிறது. இதை பார்க்கும் போது நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது என்று முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியுள்ள கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நிதி சேகரிக்கும் பணியில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஎச்பி அமைப்புகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பாஜவை சேர்ந்த மத்திய, மாநில அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் ஈடுப்பட்டு வருகிறார்கள். கோயில் கட்டுவதற்கு நன்கொடையை பக்தர்கள் தாமாக முன்வந்து கொடுக்க வேண்டும். கட்டாயப்படுத்தி வாங்கக்கூடாது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஎச்பி அமைப்பு நிர்வாகிகள் கட்டாயப்படுத்தி நன்கொடை வசூலிக்கிறார்கள். வீடு வீடாக சென்று வசூலிக்கும்போது, நன்கொடை கொடுக்காத வீடுகளில் ரெட் மார்க் போடுகிறார்கள். அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு மறைமுகமாக தொல்லை கொடுக்கப்படுகிறது.

இதை பார்க்கும்போது நாட்டில் ஜனநாயக ஆட்சி நடக்கிறதா? அல்லது சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா? என்று புரியவில்லை. ஜெர்மனில் ஹிட்லர் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது நாஜி-யயோதிகள் இடையில் நடந்த மோதலில் லட்சக்கணக்கான மக்கள் மாண்டு போயினர். ஜெர்மனில் நாஜிகள் உருவாகிய காலகட்டத்தில் தான் இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாகியதாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். நாஜிகள் எந்த கொடுர மனப்பான்மையில் செயல்பட்டார்களோ? அதே மனபான்மையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் செயல்படுகிறார்கள். மத்தியில் ஆளும் பாஜ அரசை ஆட்டி படைக்கும் மந்திரகோலாக ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகள் செயல்பட்டு வருகிறார்கள். மக்களவையில் பெரும்பான்மை பலம் உள்ளது என்பதால், எந்த திட்டம் கொண்டு வந்தாலும் யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற ஆணவத்தில் மக்கள் விரோத, விவசாய விரோத சட்டங்களை கொண்டுவந்துள்ளனர்.

அதை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை வருமான வரித்துறை, சிபிஐ என தன்னாட்சி சுதந்திரத்துடன் இயங்கும் அமைப்புகளை வைத்து மிரட்டி வருகிறார்கள். ஆட்சியாளர்களை எதிர்த்து மக்கள் கேள்வி கேட்க முடியாத நிலை உள்ளது.

இதை பார்க்கும்போது, நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடப்பது போல் உள்ளது. நமது அரசியலமைப்பு சட்டம் அனைத்து மக்களும் ஒருங்கிணைந்து வாழ்வதற்கான அதிகாரம் வழங்கியுள்ளது. பாஜ ஆட்சி அதை சீர்குலைத்து வருகிறது. மக்கள் விரோத அரசாங்கம் எதுவும் நீண்ட காலம் நிலைத்திருந்ததில்லை என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்று காட்டமாக தெரிவித்தார்.

எதிர்ப்பு

மத்திய அரசு, ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஎச்பி அமைப்புகளுக்கு எதிராக விமர்சனத்தை குமாரசாமி வைத்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஎச்பிக்கு எதிராக பேசியுள்ள குமாரசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிரமோத் முதாலிக் உள்பட இந்து அமைப்பினர் வலியுறுத்தினர். அதேபோல் அமைச்சர்கள் பசவராஜ்பொம்மை, பி.ஸ்ரீராமுலு, வீ,சோமண்ணா உள்பட பாஜ தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>