×

ஆபரேஷன் ஸ்மைல் திட்டம் மூலம் 4 ஆண்டில் 11,244 குழந்தைகள் மீட்பு: ரயில்வே டிஜிபி தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் இந்த மாதம் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை ‘ஆபரேஷன் ஸ்மைல்’ என்ற பெயரில் ரயில் நிலையங்களில் சுற்றித்திரியும் குழந்தைகள் மீட்கப்பட்டு, அவர்களின் பெற்றோர் மற்றும் காப்பகங்களில்  ரயில்வே போலீசார் மூலம்  ஒப்படைக்கப்பட்டனர். மேலும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டு வரும், இந்த ‘ஆபரேஷன் ஸ்மைல்’ நிறைவு நிகழ்ச்சி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு தலைமை வகித்தார். ஐஜி வனிதா மற்றும் டிஐஜி ஜெயகவுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ‘ஆபரேஷன் ஸ்மைல்’ மூலம் குழந்தைகளை பத்திரமாக மீட்டு ஒப்படைத்த ரயில்வே போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆபரேஷன் ஸ்மைல் மூலம் கடந்த 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 1,080 குழந்தைகளை மீட்டுள்ளோம். தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு மட்டும் வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள் மற்றும் வழிதவறி வந்த குழந்தைகள் என மொத்தம் 2 ஆயிரத்து 371 பேர் மீட்கப்பட்டு, அதில் 66 குழந்தைகள் அவர்களது பெற்றோரிடமும், 2 ஆயிரத்து 305 குழந்தைகள் காப்பகத்திலும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், 2017ம் ஆண்டு 2 ஆயிரத்து 68 குழந்தைகளும், 2018ம் ஆண்டு 2 ஆயிரத்து 475 குழந்தைகளும், 2019ம் ஆண்டு 2 ஆயிரத்து 392 குழந்தைகளும், 2021 ஜனவரி முதல் தற்போது வரை 1,106 குழந்தைகள் என மொத்தம் 11 ஆயிரத்து 244 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில்  76 சதவீதம் பேர் காப்பகத்திலும், 24 சதவீதம் பேர் பெற்றோரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், தமிழ்நாடு ரயில்வே காவல் துறையில் பெண்களின் பங்கு அதிகமாக உள்ளது. திருச்சி மற்றும் சென்னை ரயில் நிலையத்தில் மட்டுமே 30 சதவீத பெண் போலீசார் பணியாற்றுகின்றனர்.

Tags : children , Operation Smile, Project, Children, Recovery
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்