×

2வது டெஸ்ட் போட்டியில் 317 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி பதிலடி கொடுத்தது இந்தியா: அஷ்வின் ஆட்ட நாயகன்

சென்னை: இங்கிலாந்து அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், இந்தியா 317 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று பதிலடி கொடுத்தது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் கடந்த 13ம் தேதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. ரோகித்  161, ரகானே 67, ரிஷப் 58 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 134 ரன்னில் சுருண்டது. பென் போக்ஸ் அதிகபட்சமாக 42 ரன் எடுத்தார். இந்திய தரப்பில் அஷ்வின் 5, இஷாந்த், அறிமுக வீரர் அக்சர் தலா 2, சிராஜ் ஒரு விக்கெட் எடுத்தனர்.

195 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய இந்தியா, அஷ்வின் 106 ரன் மற்றும் கேப்டன் கோஹ்லி 62 ரன் விளாச 286 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் மொயீன் அலி, ஜாக் லீச் தலா 4, ஓல்லி ஸ்டோன் ஒரு விக்கெட் எடுத்தனர். இதைத் தொடர்ந்து, 482 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, 3ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன் எடுத்திருந்தது. கேப்டன் ஜோ ரூட் 2, லாரன்ஸ் 19 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். லாரன்ஸ் 26 ரன் எடுத்து அஷ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு வந்த பென் ஸ்டோக்ஸ் 8, போப் 12, போகஸ் 2 ரன் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர். உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து 48.3 ஓவரில் 7 விக்கெட் இழந்து 116 ரன் எடுத்திருந்தது.

பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் ஜோ ரூட் (33 ரன்), ஸ்டோன் (0) இருவரையும் அக்சர் உடனுக்குடன் பெவிலியன் அனுப்பினார். ஜோ ரூட் அவுட்டானதும், இன்னும் சில நிமிடங்களில் ஆட்டம் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மொயீன் அலி ஆக்ரோஷமாக விளையாடி இந்திய பந்துவீச்சை சிதறடித்தார்.  அக்சர் வீசிய 52வது ஓவரில் அவர் ஹாட்ரிக் சிக்சர் விளாசி மிரட்டினர். தொடர்ந்து சிக்சரும். பவுண்டரியும் அடித்த அவர், குல்தீப் சுழலில் பிட்சை விட்டு வெளியேறி சிக்சர் அடிக்க முயன்றபோது விக்கெட் கீப்பர் ரிஷப் எளிதாக ஸ்டம்பிங் செய்யப்பட்டார். வெறும் 18 பந்துகளை மட்டுமே சந்தித்த மொயீன் 43 ரன் (3 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி கடைசி கட்டத்தை கலகலப்பாக்கியது குறிப்பிடத்தக்கது.

அவரது ஆட்டம், தங்கள் அணியின் முன்னணி வீரர்கள் எப்படி பேட் செய்திருக்க வேண்டும் என்று பாடம் நடத்தியது போல இருந்தது. இங்கிலாந்து 54.2 ஓவரில் 164 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. ஸ்டூவர் பிராடு 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா 317 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று, இதே மைதானத்தில் முதல் டெஸ்டில் அடைந்த படுதோல்விக்கு பதிலடி கொடுத்தது. இந்திய தரப்பில் அறிமுக வீரர் அக்சர் 5, அஷ்வின் 3, குல்தீப் 2 விக்கெட் வீழ்த்தினர். அஷ்வின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மொத்தம் 4 போட்டிகள் கொண்ட தொடரில், இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெறும்.  அதில் பிப்.24ம் தேதி  தொடங்கும் 3வது டெஸ்ட் இளஞ்சிவப்பு பந்தில் பகல்/இரவு டெஸ்ட் போட்டியாக நடக்க உள்ளது.

அறிமுக அசத்தல் அக்சர்!

* அறிமுக போட்டியின் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் அள்ளிய இந்திய வீரர்கள் பட்டியலில், அக்சர் இடம் பிடித்துள்ளார். வி.வி.குமார் (5/68 பாகிஸ்தான், 1960/61 - டெல்லி), ஜோஷி (6/103 ஆஸ்திலிரயோ, 1979/80 - சென்னை), ஹிர்வானி (8/61, 8/75 வெஸ்ட் இண்டீஸ், 1987/88 - சென்னை), அமித் மிஸ்ரா (5/71 ஆஸ்திரேலியா, 2008/09 - மொஹாலி), அஷ்வின் (6/47 வெஸ்ட் இண்டீஸ், 2011/12 - டெல்லி) ஆகியோருடன் அக்சர் இணைந்துள்ளார்.
* இந்தியா 317 ரன் வித்தியாசத்தில் வென்றது 5வது பெரிய வெற்றியாகும். 2015/16ல் டெல்லியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 337 ரன் வித்தியாசத்தில் வென்றது முதல் இடத்தில் உள்ளது.
* கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 2017ல் காலே அரங்கில் 304 ரன் வித்தியாசத்தில் வென்றதே பெரிய வெற்றியாக இருந்தது.
* இங்கிலாந்துக்கு எதிரான பெரிய வெற்றியும் இது தான். முன்னதாக இந்தியா 1986ல் லீட்ஸ் அரங்கில் 279 ரன் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியே சாதனையாக இருந்தது.
* இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பை தக்க வைத்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 4 டெஸ்ட்கள் கொண்ட தொடரை 3-1 அல்லது 2-1 என வென்றால் இந்தியா பைனலுக்கு முன்னேறலாம். 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றால் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்த்து விளையாடும். இந்த முடிவுகள் கிடைக்காத நிலையில், நியூசிலாந்து - ஆஸ்திரேலியா பைனலில் விளையாடும்.
* இந்த வெற்றியுடன், சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் வெற்றிகளைக் குவித்த இந்திய கேப்டன் என்ற எம்.எஸ்.தோனியின் (21 வெற்றி) சாதனையை கோஹ்லி சமன் செய்துள்ளார்.

ரசிகர்களுக்கு நன்றி...

முதல் டெஸ்ட் உள்ளூரில் என்றாலும் ரசிகர்கள் இல்லாத அரங்கில் விளையாடியது வித்தியாசமான அனுபவம். வெளிப்படையாக சொல்வது என்றால் இந்த டெஸ்ட்டிலும் முதல் 2நாட்கள் பெரிதாக உற்சாகமில்லை. ஆனால் 2வது இன்னிங்சில் நிலைமை மாறியது. அதற்கு ரசிகர்கள் முக்கிய காரணம். வெற்றிக்கு ரசிகர்களின் ஆதரவு எவ்வளவு முக்கியம் என்பதற்கு இந்த போட்டி நல்ல உதாரணம். அவர்கள் கொடுத்த உற்சாகத்துக்கு முன்பு வெயில் பெரிதாகவே தெரியவில்லை. இந்தப் போட்டியில் டாஸ் வென்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை. முதல் இன்னிங்சில் இருந்தே சிறப்பாக விளையாடினோம். பன்ட், அக்சர் என ஒவ்வொருவரும் சிறப்பாக விளையாடினர். அஷ்வின் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கலக்கினார். இங்கிலாந்து அணியில் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். அதனால் தொடர் முழுவதும் முழுத்திறைமையை வெளிப்படுத்தியாக வேண்டும்.
- இந்திய கேப்டன் கோஹ்லி


ஹீரோவாக உணர்கிறேன்...

முதல் டெஸ்டில் விளையாடிய களிமண் ஆடுகளத்தை விட, இந்த சிவப்பு மண் ஆடுகளம் வித்தியாசமாக இருந்தது. பேட்ஸ்மேன்களின் மனநிலைதான் எங்களுக்கு விக்கெட்களாக மாறியது. இந்த அரங்கில் நான் பல ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். விக்கெட்களை பெற தந்திரமும், நுட்பங்களும் தேவை.  முக்கியமாக இலக்குகளை கொண்டிருக்க வேண்டும். பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அந்த அழுத்தத்தை நானே எடுத்துக் கொண்டேன். பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் மிகவும் ஆதரவாக இருக்கிறார். என்னை உணர வைத்ததில் ரகானோவுக்கும் பங்கு உண்டு. சிட்னி டெஸ்ட்  எனக்கென தனி பாணியை அமைத்து தந்தது. சென்னையில் சாதித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது... என்றார் ஆட்ட நாயகன் அஷ்வின்.

பாடம் கற்றோம்...

இந்திய அணி  பேட்டிங், பவுலிங், பீல்டிங் என 3 துறைகளிலும் எங்களை விட சிறப்பாக விளையாடியது. அதனால் இந்த வெற்றி அவர்களுக்கு பெருமையையும், எங்களுக்கு பாடத்தையும் தந்துள்ளது. ஒரு ஓவரின் 6 பந்துகளையும் பேட்ஸ்மேனுக்கு நெருக்கடி தரும் வகையில் வீச வேண்டும். இங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப ரன் குவிப்பதையும் நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.  கூடுதலாக ஒரு சுழற்பந்துவீச்சாளரை பயன்படுத்தி இருக்கலாம். போக்ஸ் முதல் இன்னிங்சில் சிறப்பாக பேட் செய்தார். மொயீன் அலி பேட்டிங்கில் எப்படி எதிரணிக்கு அழிவை ஏற்படுத்துவார் என்பது எங்களுக்கு தெரியும். அவர் பந்து வீச்சையும் சிறப்பாக செய்தார். 3வது டெஸ்டில் நாங்கள் விளையாடும்போது கட்டாயம் வித்தியாசம் இருக்கும். அடுத்து இளஞ்சிவப்பு பந்து மூலம் விளையாட உள்ள அகமதாபாத் பகல்/இரவு ஆட்டம் வித்தியாசமாக இருக்கும். இதுவரை 2 பகல்/இரவு டெஸ்டில் மட்டுமே விளையாடி உள்ளோம். நாங்கள் விரைவாக கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.
- இங்கிலாந்து கேப்டன்  ரூட்

விளையாடிய ‘தமிழ்’

பரிசளிப்பு நிகழ்ச்சியை தொகுத்தளித்த முன்னாள் வீரர் முரளி கார்த்திக் தமிழில் கேள்விகளை கேட்க, அஷ்வின் தமிழில் பதிலளிக்க  சேப்பாக்கம் அரங்கமே ஆரவாரத்தில் அதிர்ந்தது. அப்போது அஷ்வின், ‘நான் 8 வயதாக இருக்கும்போது, இந்த அரங்கத்திற்கு கிரிக்கெட் பார்க்க என் தந்தை அழைத்து வந்தார். இங்கு நான் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். அதில் இந்த டெஸ்ட் போட்டிதான் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்கே கிரிக்கெட் விளையாடும் போது ஒரு ‘ஹீரோ’ உணர்வு கிடைக்கிறது.  கொரோனா காலத்திலும் இப்படி அறிவார்ந்த ரசிகர்கள் போட்டியை காண வந்துள்ளனர். தங்களைப் பற்றி கவலைப்படாமல் எங்களை உற்சாகப்படுத்த வந்துள்ளனர். ரசிகர்கள் இல்லாமல் 0-1 என்றிருந்த நாங்கள், ரசிகர்கள் ஆதரவுடன் இன்று 1-1 என்ற நிலையை எட்டியுள்ளோம். இப்போது எனக்கு பேச வார்த்தைகள் இல்லை. ஒவ்வொரு முறை பந்து வீச வரும்போது ரசிகர்கள் எழுப்பும் உற்சாக குரல் ‘வேற... வேற..’ உணர்வை தந்தது. இந்த வெற்றியை அரங்கில் உள்ள ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்’ என்றார்.

Tags : India ,Test ,England ,Man of the Match ,Ashwin , Test match, England, India, win
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...