×

டாஸ்மாக் கடையில் தகராறு: ஸ்டிக்கர் கடை ஊழியர் அடித்துக்கொலை: வாலிபர் கைது

அம்பத்தூர்: அம்பத்தூர் டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளியை கல்லால் அடித்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை, ராயப்பேட்டை, கபூர் தெருவை சேர்ந்தவர் ஜாபர் பாட்ஷா(31). அம்பத்தூர் வரதராஜபுரத்தில் உள்ள ஸ்டிக்கர் கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி நூர்நிஷா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. ஜாபர் பாட்சா குடிப்பழக்கம் உடையவர்.  கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்னையால் கணவரை பிரிந்து நூர்நிஷா குழந்தைகளுடன் ஐஸ்ஹவுசில் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை ஜாபர் பாட்ஷா அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே தண்டவாள ஓரத்தில் தலையில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு அம்பத்தூர் போலீஸ் உதவி கமிஷனர் கனகராஜ், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் விரைந்து வந்து இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தியதில், ஜாபர் பாட்ஷாவை கல்லால் அடித்து கொலை செய்தது, அம்பத்தூர் திருவள்ளுவர் நகர் சமயபுரத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த கார்த்தி (எ) அறுப்பு கார்த்தி(25) என்பது தெரியவந்தது. பின்னர், தனிப்படை அமைத்து செல்போன் சிக்னல் உதவியுடன் ஆவடி பகுதியில் தலைமறைவாக இருந்த கார்த்தியை மடக்கி பிடித்தனர்.

தொடர்ந்து, அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், ஜாபர் பாட்ஷா நேற்று முன்தினம் இரவு அம்பத்தூர் மார்க்கெட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மதுபாட்டில் வாங்க வந்துள்ளார். அங்கு கார்த்தியும் மது வாங்க வந்தார். அப்போது, ஒருத்தருடைய கை ஒருத்தர் மீது பட்டதால், அவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஜாபர் பாட்ஷா, கார்த்தியை அவதூறாக திட்டியதாக கூறப்படுகிறது. பின்னர், இருவரும் அங்கேயே மது அருந்தினர். ஜாபர் பாட்ஷா குடிபோதையில் அங்கிருந்து நடந்து அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே தண்டவாள பகுதிக்கு வந்தபோது, கார்த்தியும் போதையில் அவரை பின்தொடர்ந்து வந்துள்ளார்.

பின்னர், அவர், “என்னை ஏன் அவதூறாக திட்டினாய்” என ஜாபரை கேட்டு தகராறு செய்தார். இருவரும் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த கார்த்தி அருகில் கிடந்த கல்லை எடுத்து ஜாபர் பாட்ஷாவின் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில், மண்டை உடைந்து ஜாபர் பாட்ஷா ரத்த வெள்ளத்தில் அங்கேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த கார்த்தி அங்கிருந்து தப்பியோடியது தெரியவந்தது. புகாரின்பேரில் போலீசார் வழக்கு  பதிவு செய்து கார்த்தியை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Tasmac ,store ,Sticker ,death , Tasmac, murder, youth, arrest
× RELATED டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற கைதான நான்கு வாலிபர்களுக்கு சிறை