மற்ற கட்சிகளை ஒழித்து கட்டும் முயற்சி பாஜவின் கையாலாகாத்தனம்: தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத்

* சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் பலம் எப்படி இருக்கிறது?

தமிழகத்தில் காங்கிரஸ் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. நிச்சயமாக வரும் தேர்தலில் வெற்றி வாய்ப்பை கூட்டணிக்கு பெற்றுத் தரக்கூடிய பலம் பொருந்திய கட்சியாக இருக்கிறது.

* காங்கிரஸ் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்று பாஜ கூறி வருகிறதே?

ஒரு நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக தான் மக்கள் ஒரு கட்சிக்கு ஆதரவு தருகின்றனர். இன்னொரு கட்சியை முழுமையாக அழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பாஜவுக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது. கிடைக்கப் போவதும் கிடையாது. மக்கள் ஆதரவு பெற்று அவர்களுக்கு நலத்திட்டங்களை செய்வதை விட்டு விட்டு மற்ற கட்சிகளை எல்லாம் ஒழித்து கட்டுவேன் என்று வேலை செய்வது அவர்களது கையாலாகாத தனத்தை தான் காட்டுகிறது.

* அதிமுகவை கையில் வைத்துக் கொண்டு தமிழகத்தில் பாஜ ஒரு கட்டமைப்பை ஏற்படுத்த முயல்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளதே?

ஆட்சியில் இருப்பவர்கள் அரசாங்கத்தை மக்கள் பயன்பாட்டுக்கு நடத்த வேண்டும். அதை விட்டு விட்டு, கட்சியை பலப்படுத்துகிற வேலையில் அவர்கள் தவறாக புரிந்து கொண்டு இறங்கினார்கள் என்று சொன்னால் அது தற்கொலைக்கு சமம் என்பதை பாஜ புரிந்து கொள்ள வேண்டும்.

* தமிழகத்தில் ராகுல்காந்தி தொடர் சுற்றுப்பயணம் பலன் தருமா? அவர் வந்து செல்லும் பகுதிகளுக்கு பாஜ தலைவர்கள் வர உள்ளனரே?

தமிழகத்தில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் தொண்டர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எழுச்சியாக உள்ளது. மக்களை சந்திப்பதன் மூலம் அவர்களும் தமிழகத்தை நன்கு உணர்ந்து கொண்டு கட்சி தொண்டர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்கிற நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. எங்களுக்கெல்லாம் மிகப் பெரிய ஒரு மகிழ்ச்சியான தருணம். இதுபோன்ற நிறைய சுற்றுப்பயணம் மேற்கொள்வதன் மூலம் மக்களை நேரடி தொடர்பு கொள்வதன் மூலம் கட்சியும் பலப்படும். தமிழகத்துக்கும் நல்ல ஒரு எதிர்காலம் இருக்கிறது என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ராகுல்காந்தி வந்து செல்லும் தொகுதிகளுக்கு பாஜ தலைவர்கள் பிரசாரத்துக்கு வந்து செல்வதைப் பற்றி சொல்ல வேண்டுமானால் அது பயத்தின் வெளிப்பாடு.

Related Stories:

>