×

நாளா பக்கம்... புதுவை, கேரளா, மேற்கு வங்கம், அசாம்

* சத்தமின்றி காரியத்தை சாதிக்கும் ஆர்எஸ்எஸ்
கடந்த மக்களவை தேர்தலில் 18 இடங்களை பிடித்ததால் கிடைத்த பெரும் நம்பிக்கையில்தான், மேற்கு வங்கத்தில் இம்முறை ஆட்சியை பிடித்து விடலாம் என்று பாஜ பரபரப்பாக இயங்கி வருகிறது. இம்மாநிலத்தில் கடந்த 6 ஆண்டுகளில் இக்கட்சி பெற்றுள்ள வளர்ச்சி, மிக மிக அபரிமிதமானது. ஆனால், இந்த பின்னணியில் ஆர்எஸ்எஸ்.சின் நீண்ட கால வியூகம் அடங்கி இருக்கிறது என்பது பலருக்கு தெரியாது. பாஜ என்ற காடு வளர்வதற்கான விதையை ஆர்எஸ்எஸ், ஆங்காங்கு பள்ளிகள் என்ற பெயரில் விதைத்து வந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இம்மாநிலத்தில் நூற்றுக்கணக்கான சிறிய, பெரிய பள்ளிகளை அது நேரடியாகவும், ஆதரவாளர்கள் மூலமாகவும் சத்தமின்றி திறந்துள்ளது. அங்குதான் தனது கொள்கைகளை மாணவர்கள், பெற்றோர்களின் மனதில் ஆழமாக விதைத்துள்ளது. இதுதான், மேற்கு வங்க மக்களிடம் பாஜ இன்று போய் சேர்வதற்கான அடித்தளமாக இருந்துள்ளது.

* காதலர் தினத்தில் நடந்த பிரேக் அப்
அசாமில் கடந்த சட்டப்பேரவை தேர்தலை பாஜ.வுடன் இணைந்து சந்தித்தது போடோலாந்து மக்கள் முன்னணி. 13 தொகுதிகளில் போட்டியிட்டு 12 இடங்களை அபாரமாகவும் வென்றது. ‘நல்லாத் தானே போய்கிட்டு இருக்கு’ என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், குடியுரிமை சட்டத்தால் இருதரப்பும் சண்டக்கோழிகளாக மாறின. இதனால், பிராந்திய கவுன்சில் தேர்தலில் போடோலாந்து மக்கள் முன்னணி தனியாக போட்டியிட்டது. இது, பாஜ தலைவர்களின் ஈகோவை கிளறி விட்டு விட்டதால், யுபிபிஎல் மற்றும் ஞான சுரக்க்ஷா கட்சிகளுடன் இணைந்து பிராந்திய கவுன்சிலை கைப்பற்றியது.

அதோடு, கடந்த 5 ஆண்டுகளாக போடாலாந்து மக்கள் முன்னணியுடன் வைத்திருந்த உறவில் ஒட்டிக் கொண்டிருந்த கொஞ்சம் நஞ்சத்தையும் கடந்த காதலர் தினத்தன்று முறித்துக் கொண்டு விட்டது பாஜ. இந்த குழப்பங்கள் காரணமாக போடோலாந்து மக்கள் முன்னணியின் நிலைப்பாடு பற்றி பல்வேறு யூகங்கள் எழுந்து வந்தன. இந்த குழப்பங்களுக்கெல்லாம் பிப்ரவரி 14ம் தேதி முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் அசாம் மாநில நிதி அமைச்சரான ஹிமாந்த பிஸ்வா சர்மா. ‘போடோலாந்து மக்கள் முன்னணியுடன் பாஜ கூட்டணி இல்லை’ என்று கூறியுள்ளார்.

* இருக்கிறத விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசை…
கேரள தேசியவாத காங்கிரஸ் தலைவராக இருந்த மாணி கப்பன், சமீபத்தில் அக்கட்சியை உடைத்துக் கொண்டு தனிக்கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். அதோடு, தான் இப்போது எம்எல்ஏ.வாக உள்ள பலா தொகுதிக்காக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியுடன் கூட்டணி சேரப் போவதாகவும் தெரிவித்தார். ஆனால், காங்கிரஸ் மேலிடமோ இவரை கண்டுக் கொள்ளவில்லை. ‘தேசியவாத காங்கிரசை மொத்தமாக அழைத்து கொண்டு வந்திருந்தால், மாணி கப்பனை கூட்டணியில் வரவேற்று இருப்போம்.

அவர் கட்சியை விட்டு விட்டு, ஒருசில ஆதரவாளர்களுடன் மட்டுமே வருவதாக கூறுகிறார். அவருக்கு பலா தொகுதிதான் வேண்டும் என்றால், ஐஜமு சார்பில்தான் போட்டியிட வேண்டும். அதுவும் காங்கிரஸ் தலைமை இவரை சேர்த்து கொள்வதா, வேண்டாமா என முடிவெடுத்த பின்னரே தெரிய வரும்,’ என்று சொல்கிறார் கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன். ‘இருக்கிறத விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசைய பாரு’ன்னு தமிழ்ல ஒரு பழமொழி உண்டு. இப்ப மாணி கப்பன் கதை அந்த கதையாகி விட்டது.

* ஒரு கை பார்ப்போம் கொதிக்கும் காங்கிரஸ்
புதுச்சேரியில் 4 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால், நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. ராஜினாமா செய்தவர்களில் 2 பேர், பாஜ.வில் இணைந்து விட்டனர். தற்போது, ராஜினாமா செய்துள்ள மல்லாடி கிருஷ்ணா ராவும், ஜான் குமாரும் தாமரை பக்கம் போவார்கள் என்பதும் உறுதி. இதனால் ஆத்திரமடைந்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்கள், ‘கட்சிக்கு துரோகம் செய்த 4 பேரையும் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்,’ என்கின்றனர். தற்போது காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களும் தங்கள் வாகனங்களில், ‘வாங்க... ஒரு கை பார்ப்போம்,’ என்ற ஸ்டிக்கரை ஒட்டி வருகின்றனர். இதுதான், அவர்களின் இந்த தேர்தல் சுலோகமாம்.


Tags : Kerala ,New Delhi ,Assam ,West Bengal , Daily Page ... New Delhi, Kerala, West Bengal, Assam
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...