×

மாவட்டம் மாறி வந்தாரு... மனம் கலங்க விட்டாரு...! - மதுரை திருமங்கலம் தொகுதி எம்எல்ஏ அமைச்சர் உதயகுமார்

மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் தொகுதி முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக உள்ளது. 2 முறை அமைச்சர்கள், ஒரு சட்டசபை சபாநாயகரை கொடுத்த தொகுதி என்ற பெருமைக்குரியது. கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்களை பெற்றபோதும் திருமங்கலம் தொகுதி பெரிய அளவில் வளர்ச்சி பெறவில்லை. தொகுதியின் முக்கிய தொழிலாக விவசாயம் இருந்தும், விவசாயிகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது. திருமங்கலம் பிரதான கால்வாயில் தண்ணீர் வரத்து இல்லாததால் பல்வேறு கண்மாய்களில் தண்ணீர் இல்லாத நிலையே இருக்கிறது. இதற்கான திட்டங்களை தொகுதி எம்எல்ஏவான அமைச்சர் உதயகுமார் முன்னெடுக்கவில்லை.

கள்ளிக்குடி தாலுகாவில் பல்வேறு கிராமங்கள் தற்போது காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இணைக்கப்படவில்லை. இதனால் தொகுதியில் பெரும்பாலான மக்கள் குடிநீர் தேடி அலையும் நிலை நிலவுகிறது. கடந்த பல ஆண்டுகளாக பேரையூர் மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையும், சிறிய விபத்துகளுக்கே மதுரைக்கு அனுப்பும் நிலையே இருக்கிறது. பேரையூரில் இரவு வெளியூர் பஸ்கள் பஸ் ஸ்டாண்டை புறக்கணிக்கின்றன. மாவட்ட தலைநகரான மதுரைக்கு பேரையூரிலிருந்து நேரடி பஸ் வசதியில்லை. இச்சிகுளம், பெரிய கண்மாய் தூர்வாரப்படவில்லை. ‘மேலிட’ செல்வாக்கு பெற்றிருந்தாலும், தொகுதி மேம்பாட்டிற்கென அளித்த வாக்குறுதிகள் எதையும் அமைச்சர் உதயகுமார் நிறைவேற்றவில்லை.

கப்பலூர் சிட்கோ தவிர்த்து பெரிய அளவில் தொழிற்பேட்டை எதுவும் தொகுதிக்குள் இல்லை. விளையும் பூக்களை பதப்படுத்த தானிய, பதப்படுத்தும் கிடங்கு அமைப்பது உள்ளிட்ட தேர்தல் காலத்தில் தொகுதிக்குள் அமைச்சர் தந்த பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ‘‘கடந்த 2011 தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிட்டு அமைச்சரானார். இந்த முறை எங்கள் தொகுதியில் மாறி போட்டியிட்டார். நாங்கள் நம்பி வாக்களித்தோம். மீண்டும் அமைச்சரானார். ஆனால், மேலிடத்திடம் காட்டிய விஸ்வாசத்தை தொகுதிக்குள் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்...’’ என்கின்றனர் திருமங்கலம் தொகுதி மக்கள்.

* எய்ம்ஸ் வந்தது என்னாலதான்...!
அமைச்சர் உதயகுமார் கூறும்போது, ‘‘உசிலம்பட்டியிலிருந்து பிரித்து திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு வருவாய் கோட்டம், கள்ளிக்குடி புதிய தாலுகா, திருமங்கலம் கல்வி மாவட்டம், கிராமம் நகரங்களில் சாலை, இணைப்பு சாலை, காமராஜர் உறுப்புக்கல்லூரி, செக்கானூரணி ஐடிஐ முதலியவற்றை கொண்டு வந்துள்ளேன். போராடி  எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்கு கொண்டு வந்தேன். கொரோனாவால் கட்டிடப்பணி துவக்குவது காலதாமதமாகிறது. திருமங்கலம் - விருதுநகர் நான்குவழிச்சாலையில் பல்வேறு பகுதிகளில் ஹைமாஸ் விளக்குகள் அமைத்துள்ளேன். திருமங்கலம் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. திருமங்கலத்திற்கு புதிய பஸ் ஸ்டாண்ட், ரயில்வே மேம்பாலபணிகள் விரைவில் துவங்கும்’’ என்றார்.

* வாக்குறுதிகளை நிறைவேத்தலை...!
மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன் கூறும் போது, ‘‘திருமங்கலம் நகருக்கு புதிய பஸ் ஸ்டாண்ட் ரயில்வே ஸ்டேஷன், மேம்பாலம், பாதாள சாக்கடை அமைப்பேன் என்றார் அமைச்சர் உதயகுமார். இதில் ஒன்று கூட நிறைவேறவில்லை. வைகை அணையிலிருந்து தண்ணீர் கொண்டு வர வாறுகாலை சீரமைப்பேன் என்ற வாக்குறுதியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவேன் என்றார். ஒருவருக்கு கூட வேலைவாய்ப்பு தரவில்லை. நூறு நாள் வேலைகளில் முழுஊதியம் கிடைக்க வழிசெய்வேன் என அறிவித்து விட்டு அதனை செயல்படுத்தவில்லை. தொகுதியில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் பிரச்னை இன்னும் உள்ளது. தீர்வு காணப்படவில்லை. ஆரம்ப சுகாதார நிலையங்கள் நிலை படுமோசமாகவே உள்ளது. கடந்த தேர்தலில் அவர் கொடுத்த வாக்குறுதிகளில் பல நிறைவேற்றப்படாமலே உள்ளது’’ என்றார்.


Tags : district ,Udayakumar ,Thirumangalam ,Madurai , The district has changed ... the mind is disturbed ...! - Madurai Thirumangalam Constituency MLA Minister Udayakumar
× RELATED 15 நாள் கால்ஷீட்; ஷாட்னா நடிப்பார்… கட்னா நிறுத்துவார்…