×

மண்ணின் மைந்தரிடம் 207 ஓட்டுகளில் வெற்றியை பறிகொடுத்த மாப்பிள்ளை

சேலம் தமிழக அரசியல் களத்தில் பல்வேறு திருப்பங்களுக்கு வித்திட்ட ஊர். 1951ம் ஆண்டு சேலம் நகரம் என்ற தொகுதி உருவானது. அந்த ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அந்த கட்சியின் முன்னணி தலைவரான வரதராஜூலு நாயுடு, இந்திய பொதுவுடமை கட்சி சார்பில் மோகன்குமாரமங்கலம் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் வேட்பாளரான வரதராஜூலு நாயுடு 19,674 வாக்குகள் (35.47 சதவீதம்) பெற்று வெற்றி பெற்றார். இந்திய பொதுவுடமை கட்சி வேட்பாளரான மோகன்குமாரமங்கலத்திற்கு 17,554 (31.65 சதவீதம்) வாக்குகள் கிடைத்தது. இதற்கடுத்து 1957ம் ஆண்டு தேர்தலில் தான் திமுக, முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்டது. 123 சட்டசபை தொகுதிகளிலும், 13 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. இதில் 15 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது.

திமுக சார்பில் அண்ணா, கருணாநிதி, மதியழகன், நெடுஞ்செழியன், கவிஞர் கண்ணதாசன் என்று முக்கிய தலைவர்கள் அனைவரும் தேர்தல் களத்தில் இந்த ஆண்டு தான் குதித்தனர். அப்போது சேலம் நகரம் என்று இருந்த தொகுதியானது சேலம் ஒன்றாவது தொகுதி என்று  பெயர் மாற்றம் கண்டிருந்தது. இந்த தொகுதியில் திமுக சார்பில் நாவலர் நெடுஞ்செழியனும், காங்கிரஸ் சார்பில் காமராஜரின் நெருங்கிய நண்பரான தியாகி மாரியப்பனும் முக்கிய வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இதில் மாரியப்பன் 24,920 வாக்குகள் பெற்று (45.21சதவீதம்) வெற்றி பெற்றார். நாவலர் நெடுஞ்செழியனுக்கு 24,713 வாக்குகள் (44.83 சதவீதம்) கிடைத்தது. வெறும் 207 வாக்குகள் வித்தியாசத்தில் நெடுஞ்செழியன் தோல்வியை தழுவினார்.

தமிழகம் முழுவதும் அப்போது திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு சுயேட்சை சின்னமான சேவல் சின்னம் ஒதுக்கப்பட்டது. சேலத்து மண்ணின் மைந்தரான தியாகி மாரியப்பன் இரட்டை காளைமாடு சின்னத்தில் போட்டியிட்டார். சேலத்து மாப்பிள்ளை என்ற சிறப்புடன்  களமிறங்கிய நாவலர் நெடுஞ்செழியன், கடுமையான இழுபறிக்கு பிறகு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இதேபோல் திருக்கோஷ்டியூர் தொகுதியில் போட்டியிட்ட கவியரசு கண்ணதாசனும், தேனி தொகுதியில் போட்டியிட்ட நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனும் தோல்வியை தழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்பிறகு 1962ல் நடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு சுயேட்சை சின்னமான உதயசூரியன் ஒதுக்கப்பட்டது. 143 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் 50 இடங்களில் வெற்றி பெற்றனர். அதற்கு பிறகு ராசியான உதயசூரியன் சின்னம், திமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமாக மாறியது. 174 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் 138 தொகுதிகளில் வெற்றிக்கனி பறித்தனர். பேரறிஞர் அண்ணா, தமிழக முதல்வராக  தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று முதல் இன்றுவரை உதயசூரியன் சின்னத்தில் மட்டுமே போட்டியிடும் ஒரே கட்சி திமுக என்பதும் பெருமைக்குரிய வரலாறு.

* முன்னாள் அமைச்சருடன் பாஜ யுத்தம்
தாம்பரம் தொகுதியில் அதிமுக தரப்பில் நின்று தோல்வியை சந்தித்த இபிஎஸ் ஆதரவாளரும், மாவட்ட செயலாளருமான சிட்லபாக்கம் ராஜேந்திரன் தொகுதி மாறி, செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிட முடிவு பண்ணியிருக்காராம். அவர் தொகுதி மாறுவதை பயன்படுத்தி எப்படியாவது அந்த தொகுதியை கைப்பற்றிட வேண்டும் என்று ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான சின்னையா நினைக்கிறார். ஆனால், மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் அந்த தொகுதியை பாஜவிடம் கொடுத்து விடலாம் என்ற முடிவில் இருக்கிறாராம். ஏற்கனவே 2 முறை இந்த தொகுதியில் போட்டியிட்ட பாஜ மாவட்ட பொறுப்பாளர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் கணிசமான வாக்குகளை பெற்று உள்ளார்.

அவருக்கே இந்த தொகுதியை விட்டு கொடுக்கலாம் என்று காய் நகர்த்தப்படுகிறதாம். எப்படி இருந்தாலும் தனக்கு தான் சீட் கிடைக்கும் என்று பாஜ வேதசுப்பிரணியம் தேர்தல் பணியை முடுக்கி விட்டு வருகிறார். அவரும் தனது பங்குக்கு தமிழக பாஜ பொறுப்பாளர் சி.டி.ரவியை ஒரு நாள் முழுவதும் அழைத்து வந்து தொகுதி முழுவதையும் சுற்றி பார்க்க வைத்து தனது பலத்தை காட்டியிருக்கிறாராம். சின்னையாவும் எப்படியாவது சீட்டை பிடித்து விட முயற்சி செய்து வருகிறார். இதனால், அந்த தொகுதியை யார் பிடிக்க போகிறார் என்பதில் பாஜ, அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

Tags : groom ,victory ,soil miner , The groom who snatched the victory by 207 votes to the soil miner
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...