×

போலீஸ் பாதுகாப்பு பெற்ற எம்எல்ஏவால் தொண்டர்கள் அதிருப்தி

சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தொகுதிகளில் வீரபாண்டியும் ஒன்று. இது திமுக முன்னணி தலைவர்களில் ஒருவரான மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் சொந்த தொகுதி. அதிமுகவில் மாஜி அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி இத்தொகுதியை கைப்பற்றினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் யாருக்கு சீட் என்ற கடும் போட்டியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆசியால், விஜயலட்சுமியின் சகோதரி மனோன்மணிக்கு லக் அடித்தது. அதே நேரத்தில் தற்போதைய நிலவரப்படி வீரபாண்டி தொகுதிக்குள் மீண்டும் அதிமுக ஓட்டுக் கேட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தொகுதிக்கு எந்த நல்ல திட்டத்தையும் கொண்டுவருவதில் மனோன்மணி ஆர்வம் காட்டவில்லை. பஞ்சாயத்து தலைவர் செய்யும் சிறிய வேலைகளிலும் தலையிடுவது, எந்த பஞ்சாயத்தில் என்ன வேலை நடக்கிறது? என்பதை தெரிந்து கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். அவரால் கட்சியில் எந்த நிர்வாகியும் பலன் அடையவில்லை என்று அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து புலம்பிக் கொண்டிருக்கின்றனர். ‘எம்எல்ஏ எங்களுக்கு எட்டாத உயரத்தில் இருக்கிறார். அவருக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு காவலரை நியமித்து, எங்களிடமிருந்து பிரித்து வைத்த பெருமை காவல்துறை அதிகாரிகளையே சேரும்.

எதற்காக அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது? என்பதும் இதுவரை யாருக்கும் தெரியாது. கடந்த சட்டமன்ற தேர்தலில் ஓட்டு எண்ணும் மையத்தில், இவரது டம்மி வேட்பாளருக்கும், இன்னொரு வேட்பாளரின் ஆதரவாளர்களுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. இதற்காக பாதுகாப்பு கொடுக்க வேண்டுமானால், டம்மி வேட்பாளருக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும். மாறாக எம்எல்ஏவுக்கு கொடுத்ததுதான் ஆச்சரியம். இப்படியே 5 ஆண்டு துப்பாக்கி பாதுகாப்பு கொடுத்து, இனி கனவில் கூட, அவர் வேட்பாளராக முடியாது என்ற நிலையை ஏற்படுத்தி விட்டனர். இதற்காக நாங்கள் போலீசுக்கு நன்றி சொல்கிறோம்’ என்கின்றனர் கட்சி தொண்டர்கள். ஆனால் அடுத்தும் நான் தான் வீரபாண்டி வேட்பாளர். இதை யாரும் தடுக்க முடியாது என்கிறாராம் எம்எல்ஏ.

* தேர்தல் புறக்கணிப்புக்கு தயாராகும் கிராமங்கள்
சேலம் மாவட்டம் ஏற்காடு மேல்கோவிலூர் மற்றும் தாழ்கோவிலூரில் வசித்து வரும் மக்கள், முறையான சாலை வசதியில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். கொம்புதூக்கி சாலையில் இருந்து 6 கிலோ மீட்டருக்கு தார்சாலை அமைக்காவிட்டால், தேர்தல் புறக்கணிப்பை தவிர வேறுவழியில்லை என தாசில்தாரிடம் தெரிவித்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏமனூர் பகுதியில், திறக்கப்படாத துணை சுகாதார நிலையம், தரமற்ற சாலை, சுகாதாரமற்ற குடிநீர், நிரந்தர வீடு, மனை இல்லை என அடிப்படை வசதிகள் இன்றி, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தேர்தல் புறக்கணிப்பு முடிவை கையில் எடுத்துள்ளனர்.
இதேபோல், சேலம் அரிசிப்பாளையம் மக்களும் தேர்தல் புறக்கணிப்பை தெரிவித்துள்ளனர்.

Tags : Volunteers ,MLA , Volunteers dissatisfied with MLA who received police protection
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...