×

நடிகை வாணிஸ்ரீயின் ரூ.6 கோடி இடத்தை அபகரித்த நபர் கைது: போலீசார் அதிரடி

சென்னை: நடிகை வாணிஸ்ரீக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள 3 கிரவுண்ட் இடத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்த தமீம் அன்சாரி என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ. இவர், கடந்த 1967ம் ஆண்டு முதல் ‘வாணி எண்டர்பிரைசஸ்’ என்ற பெயரில் கார் பேட்டரி தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்துக்கு அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் 3 கிரவுண்ட் 1902 சதுரடி நிலத்தை கடந்த 16.9.1970ம் ஆண்டு வாங்கினார். காலியாக இருந்த இந்த இடத்தை போலியான பிழைத்திருத்தல் ஆவணம் மூலம் கிரயம் பெற்று, அந்த இடத்தை அபகரித்து விட்டதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை வாணிஸ்ரீ நடத்தும் வாணி எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதுபற்றி விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், வாணிஸ்ரீ நிறுவனத்துக்கு நிலத்தை விற்பனை செய்த பத்மினியின் கணவர் மதுசூதனன் பெயரில் ரூ.6 கோடி மதிப்புள்ள 3 கிரவுண்ட் 1902 சதுரடி நிலத்தை போலி ஆவணம் மூலம் பொது அதிகாரம் பெற்றது போல் ஒரு செட்டில்மென்ட் ஆவணம் தயார் செய்து, அதில் அமைந்தகரை ஆசாத் நகரை சேர்ந்த தமீம் அன்சாரி (43) என்பவர் சாட்சியாக கையொப்பமிட்டு அதன் மூலம் பிழைத்திருத்தல் பத்திரத்தில் வாணிஸ்ரீ இடத்தையும் சேர்ந்து பத்திரப்பதிவு செய்து நிலத்தை அபகரித்தது தெரியவந்தது. பின்னர் அந்த இடத்தை தமீம் அன்சாரி வேறு நபர்களுக்கு விற்பனை செய்து ரூ.10 லட்சம் முன் பணம் பெற்று மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகை வாணி ஸ்ரீ இடத்தை அபகரித்த தமீம் அன்சாரி மீது நில அபகரிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நேற்று முன்தினம் கைது செய்தனர்.

* ஆள்மாறாட்டம் மூலம் ரூ.1.5 கோடி நிலம் அபகரிப்பு
சென்னை திருநகர் காலனியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், 29.6.1973ல் கணபதி சிண்டிகேட் என்ற கம்பெனியின் பங்குதாரரும் பவர் பெற்றவருமான விஜயகுமார் என்பவரிடம் இருந்து சோழிங்கநல்லூர் பகுதியில் 3,480 சதுரடி கொண்ட காலி இடத்தை எனது பெயரில் கிரயம் பெற்றேன். ஆனால், எனது இடத்தை ஆள்மாறாட்டம் செய்து ரகுராமன் என்பவர் பொது அதிகாரம் பத்திரம் பதிவு செய்து அந்த இடத்தை சந்தோஷ்கோபால் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார்.. எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நிலத்தை பெற்று தர வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். அதில், சுப்பிரமணியனின் ரூ.1.5 கோடி மதிப்புள்ள இடத்தை ஆள்மாறாட்டம் செய்து பொது அதிகாரம் பெற்று ரகுராமன் மற்றும் அந்த ஆவணத்தில் சாட்சி கையெழுத்து போட்ட விஜயகுமார் ஆகியோர் அபகரித்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Tags : actress ,Vanisree: Police , Man arrested for embezzling Rs 6 crore from actress Vanisree: Police action
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...