தேவாலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் இன்று தொடக்கம்

சென்னை: இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூரும் வகையில், கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை அனுசரிக்கிறார்கள். இயேசு உயிர்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் நோன்பு இருந்து தவக்காலத்தை அனுசரிப்பது வழக்கம். இந்த தவக்காலம் ஆண்டுதோறும் சாம்பல் புதன் அன்று தொடங்குகிறது. அதன்படி இன்று கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்குகிறது. இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்த வழிபாட்டின் போது ஆயர், பங்கு தந்தையர்கள், அருட்பணியாளர்கள் கிறிஸ்தவ மக்களின் நெற்றியில் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டு, “மனந்திரும்பு, நற்செய்தியை நம்பு” என்று கூறுவார்கள். இதற்கான, சாம்பல் கடந்த ஆண்டு நடந்த தவக்கால குருத்தோலை பவனியின் போது வழங்கப்பட்ட குருத்து ஓலைகளை சேகரித்து எரித்து தயாரிப்பார்கள்.

பின்னர் அதை புனிதப்படுத்தி கிறிஸ்தவர்களின் நெற்றியில் பாதிரியார்கள் பூசுகிறார்கள். மனிதர்களின் மரணத்தை நினைவூட்டும் வகையிலும் மனமாற்றம் அடைந்து புதுவாழ்வு வாழ வேண்டும் என்பதற்காகவும் இந்த சாம்பல் நெற்றியில் பூசப்படுகிறது. சாம்பல் புதன் முதல் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்குகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆலயங்களில் இயேசு கிறிஸ்து சிலுவை மரணத்தை நினைவூட்டும் சிலுவைப் பாதை சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பார்கள். இந்நிலையில், இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகை ஏப்ரல் 4ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய வியாழக்கிழமை பெரிய வியாழனாக அனுசரிக்கப்படுகிறது.

Related Stories:

>