புதுவை காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி திடீர் நீக்கம்: தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு; ராஜினாமா செய்ய நாராயணசாமி மறுப்பு; அரசியலில் பெரும் குழப்பம்

புதுச்சேரி: புதுச்சேரியில், எம்.எல்.ஏ.க்கள் மல்லாடி கிருஷ்ணராவ், ஜான்குமார் ஆகிய 2பேரின் ராஜினாமாவை தொடர்ந்து, பெரும்பான்மை பலத்தை நாராயணசாமி தலைமையிலான அரசு இழந்தது. ஆனாலும், தனது அமைச்சரவை ராஜினாமா செய்யாது என்று நாராயணசாமி திட்டவட்டமாக அறிவித்தார். இந்த நிலையில், கவர்னர் கிரண்பேடி திடீரென மாற்றப்பட்டு தெலங்கானா கவர்னர் தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரி அரசியலில் பெரும் குழப்பம் நிலவுகிறது. புதுச்சேரியில் கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் 15 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. தற்போது திமுக மற்றும் சுயேட்சை ஆதரவுடன் ஆட்சியில் உள்ளது.  

கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட பாகூர் எம்.எல்.ஏ தனவேலு பதவி பறிக்கப்பட்டது. அவரை தொடர்ந்து அமைச்சராக இருந்த நமச்சிவாயம், அவரது ஆதரவாளர் தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ ஆகியோர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜவில் இணைந்தனர். இந்நிலையில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து முதல்வருக்கு கடிதம் கொடுத்திருந்த மல்லாடி கிருஷ்ணாராவ், நேற்று முன்தினம் தனது ஏனாம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து சபாநாயகருக்கு திடீரென கடிதம் அனுப்பினார்.

அவரைத் தொடர்ந்து காமராஜர் நகர் தொகுதி எம்எல்ஏ ஜான்குமாரும் நேற்று சபாநாயகர் சிவக்கொழுந்துவை அவரது வீட்டில் நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதை சட்டசபை ஆய்வுக்குழுவுக்கு சபாநாயகர் அனுப்பினார். பின்னர் ராஜினாமா ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் மல்லாடி கிருஷ்ணாராவிடம் ராஜினாமா குறித்து செல்போனில் தொடர்பு கொண்டு சபாநாயகர் விசாரித்தார். பின்னர் வீடியோ காலில் அவர் பேசி பதிவு செய்ததை தொடர்ந்து அவரது ராஜினாமாவும் ஏற்கப்பட்டது.

நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு இன்னும் 3 மாதம் பதவி காலம் உள்ளது. அதற்குள், அமைச்சர் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணராவ், ஜான்குமார் ஆகிய 4 பேர் அடுத்தது ராஜினாமா செய்துள்ளது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களின் பலம் 10 ஆக குறைந்தது. அதேவேளையில், திமுக 3, ஒரு சுயேட்சை எம்எல்ஏ ஆதரவுடன் ஆளுங்கட்சியின் பலம் 14 ஆக இருக்கிறது. எதிர்க்கட்சிகள் வரிசையில் என்.ஆர். காங்கிரஸ்-7, அதிமுக-4, நியமன எம்எல்ஏக்கள் 3 (பாஜக) என மொத்தம் 14 ஆக உள்ளது.

காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளதால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ், சஞ்சய் தத், ஆகியோர், முதல்வர் நாராயணசாமி, துணை சபாநாயகர் பாலன், அமைச்சர் கந்தசாமி, எம்எல்ஏக்கள் அனந்தராமன், ஜெயமூர்த்தி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறுகையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு பெரும்பான்மை இருக்கிறது.

எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நியாயமானதல்ல. எதிர்க்கட்சிகளின் பலத்தை முதலில் அவர் புரிந்து கொள்ள வேண்டும். எங்களுடைய கூட்டணி பலமாக இருக்கிறது. பெரும்பான்மையும் இருக்கிறது. எந்தளவுக்கு இந்திய அரசியலமைப்பு சட்ட விதிமுறைகள் இருக்கிறதோ, அதற்கு உட்பட்டு நாங்கள் செயல்படுவோம். பலப்பரீட்சைக்கு தயாராக இருக்கிறோம். எதிர்கட்சிகள் பதவி விலக கோரிக்கை வைக்கலாம், ஆனால் சட்டப்படிதான் நடக்க முடியும் என்றார்.

தார்மீக உரிமையில்லை: பதவி விலக நாராயணசாமி மறுத்துள்ள நிலையில் கவர்னர், சபாநாயகரை சந்தித்து முறையிட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் ஆலோசனை நடத்தியுள்ளனர். அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் தலைமையில், அக்கட்சி எம்எல்ஏக்கள் தனியாக ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து புதுச்சேரி பாஜ தலைவர் சாமிநாதன், முன்னாள் அமைச்சர்  நமச்சிவாயம் ஆகியோரும் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி சட்டசபை வளாகத்தில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. எனவே, ஆளுவதற்கு தகுதியில்லை. தானாக முன்வந்து பதவி விலக வேண்டும். இதற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வரும் பதவி விலக வேண்டும்’’ என்று தெரிவித்தார். ‘நீங்கள் ஆட்சி அமைக்க உரிமை கோருவீர்களா?’ என நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘முதலில் காங்கிரஸ் பதவி விலகட்டும். அதன்பிறகு எதிர்க்கட்சிகள் கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்’’ என்று பதில் அளித்தார்.

கவர்னர் நீக்கம்: இந்த பரபரப்பான புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்றிரவு திடீரென நீக்கினார். தெலங்கானா கவர்னராக உள்ள தமிழிசை புதுச்சேரி கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி, புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி சர்ச்சைகளின் நாயகியாக வலம் வந்தார். கவர்னர் கிரண்பேடியின் தன்னிச்சையான ஆய்வு, அதிகாரிகளை கவர்னர் மாளிகைக்கு அழைத்து ஆலோசனை கூட்டம், உத்தரவு என கிரண்பேடி போட்டி அரசாங்கம் நடத்தியதால், கவர்னர் மற்றும் முதல்வர் இடையே அதிகார மோதல் வெடித்தது.

இதைதொடர்ந்து ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் ஆகியோர் 39 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து கவர்னர் மாளிகை முன் தொடர் தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் மக்கள் நலத் திட்டங்களை தடுப்பதாலும், கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்த உத்தரவிட்டதால் பாஜவுக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படுகிறது என கூறி கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி பாஜகவினர் 5 முறை உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் நட்டா ஆகியோருக்கு கடிதம் அனுப்பினர். அண்மையில் அமித்ஷாவை நேரில் சந்தித்த பாஜவினர் கிரண்பேடி விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு ஏற்படும் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில், கிரண்பேடி மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மை இழந்தது, ராஜினாமா செய்ய முதல்வர் நாராயணசாமி மறுப்பு, கவர்னர் கிரண்பேடி மாற்றம் என்று அடுத்தடுத்த திருப்பங்களால் புதுச்சேரி அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>