தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அதிரடி நீக்கம்...ஜனாதிபதி உத்தரவு.!!!

புதுச்சேரி: பரபரப்பாக அரசியல் சூழ்நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர்  கிரண்பேடி நீக்கப்பட்டுள்ளார். யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் கடந்த காலங்களில் துணைநிலை ஆளுநருக்கும் - தேர்வு  செய்யப்பட்ட அரசாங்கத்தும் மோதல் போக்கு இருந்தது என்பதை மறுக்க முடியாது. இது மிகவும் மென்மையான அளவிலே இருந்தது.  ஜனநாயகத்தில் நம்பிக்கைகொண்ட மத்திய அரசும், அவரால் நியமிக்கப்படுகிற துணை நிலை ஆளுநரும்  விட்டுக்கொடுத்து சென்றனர். அப்போது யாருக்கு அதிகாரம் என சட்டப்புத்தகங்களை கவர்னரும் - முதல்வரும் புரட்டிக்கொண்டு  இருக்கவில்லை.

இருப்பினும் அவ்வப்போது முதல்வராக இருப்பவர்கள், துணை நிலை ஆளுநருடன் முட்டிக்கொள்வது வழக்கமானதுதான். அப்படி வைத்திலிங்கம்-ரஜினிராய், ரங்கசாமி-வீரேந்திர கட்டாரியா என மோதல்கள் இருந்தது என்பதும் உண்மைதான். இதற்கிடையே, கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் மத்தியில் பாஜ ஆட்சியும், மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி என மாற்று ஆட்சி அமைந்ததால் அரசு நிர்வாகத்தில் அதிகார போட்டி என்பது மாறி தினமும் குழாயடிச்சண்டை போல  ஆகிவிட்டது. ஒரு கட்டத்தில் நாராயணசாமி- கவர்னர் கிரண்பேடி என்ற தனிப்பட்டவர்களின் யுத்தமாக போய் முடிந்துவிட்டது.

 

ஆளுநருடனான சண்டை போக்கு ஒரு பக்கம் இருக்க தற்போது, புதுச்சேரியில், காங்கிரஸ் ஆட்சி பெருன்பான்மையை இழந்துவிட்டது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். மேலும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக  தெலுங்கானா ஆளுநர்  தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். முன்னதாக,  புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை நீக்கக்கோரி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து அம்மாநில முதல்வர் நாராயணசாமி கடிதம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>