தனித்து போட்டியா? ஆள விடுங்கடா சாமி... ‘வுடு ஜூட்...’ மனநிலையில் தேமுதிக நிர்வாகிகள்

நாகர்கோவில்: தேமுதிக சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றது. விருதாசலம் தொகுதியில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். இது தொண்டர்களுக்கும் பெருத்த உற்சாகத்தை  கொடுத்தது. தொடர்ந்து 2011ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றது. அதன் பிறகு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டது. அதன்பிறகு தேமுதிக ஆட்டம் காண தொடங்கியது.

கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் மாற்று கட்சிக்கு செல்ல தொடங்கினர். குமரி மாவட்டத்திலும் இந்த அணி மாறுதல் படலம் நடந்தது. இதனால் தேமுதிகவை வழி நடத்தி செல்லும் அளவுக்கு குறிப்பிடும்படியான நிர்வாகிகள் யாரும்  குமரியில் இல்லை. இருக்கின்ற ஒரு சிலரும் பொறுப்பை ஏற்று செலவு செய்ய தயாராக இல்லை. ஆகவே குமரியில் வளர்ந்த வேகத்தில் தேமுதிக நாளுக்கு நாள் கரைய தொடங்கிவிட்டது. குமரி கிழக்கு, மேற்கு என்று 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட போதிலும் ஒரு சில நிர்வாகிகளே தேமுதிகவில் உள்ளனர். தற்போது கட்சியின்  பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா அதிமுக கூட்டணியில் சரியான அங்கீகாரம் தராவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று கூறி வருகிறார்.

குமரி மாவட்டத்தில் தனித்து போட்டியிடுவதற்கு நிர்வாகிகள் யாரும் விரும்பவில்லை. எந்த முக்கிய கட்சியுடனாவது கூட்டணியில் இருந்தால் கூட ஏதோ ஒரு தொகுதியை கேட்கலாம். தனித்து போட்டி என்றால், எந்த தொகுதியும் வேண்டாம்  ‘வுடு ஜூட்...’ என்ற மனநிலையில் தேமுதிக நிர்வாகிகள் வந்து விட்டனராம்.

மதுரை

பிரேமலதாவின் பேச்சால்,  ‘தனித்து நிற்பதா? ஆளை விட்டால் போதும்’ என்ற மனநிலைக்கு, மதுரை தேமுதிக நிர்வாகிகளும் வந்து விட்டனராம். அதிலும் சிலர் அதிமுகவுடன் கூட்டணி என்றாலும் எனக்கு சீட் வேண்டாம் என்று  முடிவெடுத்து விட்டனர். அவர்கள் தெறித்து ஓடுவதற்கு காரணம் இருக்கிறது. கடந்த தேர்தல் முடிவுகளை பார்த்தால் தெரியும். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் 3வது அணியில் தேமுதிக போட்டியிட்டது. அந்த அணியில் தேமுதிக, மதிமுக,  விடுதலைசிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அப்போது மதுரை மாவட்டத்தில் மதுரை மத்தியத் தொகுதி, வடக்கு தொகுதி மற்றும் திருமங்கலம் என 3 தொகுதிகளில் தேமுதிக  போட்டியிட்டது.

அதில் திருமங்கலம் தொகுதியில் அக்கட்சி 20,589 வாக்குகளும், மதுரை வடக்கு தொகுதியில் 17,732 வாக்குகளும், மதுரை மத்திய தொகுதியில் 11,235 வாக்குகளும் மட்டுமே அக்கட்சிகளின் வேட்பாளர்கள் பெற்றுள்ளனர். 5 கட்சிகளுடன் கூட்டணி  வைத்தே, பெற்ற வாக்குகள் இவ்வளவுதான் என்ற நிலையில் இந்த 5 ஆண்டுகளில் கட்சியில் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சியும் இல்லை என்பதால் எதற்கு ரிஸ்க் என்று மதுரை தேமுதிக நிர்வாகிகளில் பலர் அடக்கி வாசிக்கின்றனர்.

Related Stories:

>