×

நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது ‘பாஸ்டேக்’: சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள் வாகன ஓட்டிகள் கடும் வாக்குவாதம்..போக்குவரத்து நெரிசல்; பயணிகள் அவதி

பூந்தமல்லி: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் ‘பாஸ்டேக்’ திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஸ்டிக்கர் இல்லாத வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனையடுத்து, சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும்  வாகன ஓட்டிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்து நிற்காமல் பயணம் செய்ய வசதியாக ‘பாஸ்டேக்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

குறிப்பிட்ட தொகை செலுத்தி அந்த ஸ்டிக்கர்களைப் பெற்று வாகனங்களில் ஒட்டிக்  கொண்டால், சுங்கச்சாவடிகளை வாகனம் கடக்கும்போது மின்னணு கருவி மூலம் அந்த வாகனத்துக்கான கட்டணம் தானியங்கி முறையில் பிடித்தம் செய்யப்படும். இந்தமுறைக்கு வாகன உரிமையாளர்கள் மாறுவதற்கு வழங்கப்பட்ட கால  அவகாசம் பல்வேறு கட்டங்களாக நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ‘பாஸ்டேக்’ முறை கட்டாயம் எனவும், பாஸ்டேக் முறையை பயன்படுத்தாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதைத் தவிர்ப்பதற்காக  திங்கள்கிழமை காலை முதல் சுங்கச்சாவடிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் பாஸ்டேக் ஸ்டிக்கர் விற்பனை முகாம்களில், அவற்றை வாங்குவதற்கு வாகன உரிமையாளர்கள் நீண்ட வரிசையில்  காத்திருந்தனர். இருந்தும், பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் ஒட்டாத வாகனங்கள், சுங்கச்சாவடிகளைக் கடக்கும் போது இருமடங்கு அபராதத் தொகையை செலுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. சென்னை அடுத்த போரூர் அருகே உள்ள  வானகரம் சுங்கச்சாவடியில் பெரும்பாலான வாகனங்கள் பாஸ்டேக் இல்லாமல்  வருவதால் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  இரண்டு மடங்கு  கட்டணம் வசூலிக்கப்படுவதை வாகன  ஓட்டிகள் கடுமையாக எதிர்த்து சுங்கச்சாவடி  ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் வானகரம் சுங்கச்சாவடியில்  இருபுறங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து  நெரிசலால் பாஸ்டேக்  வைத்திருக்கும் வாகனங்களும் ஆமை வேகத்தில் நகர்ந்து  செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடும் போக்குவரத்து நெரிசலால் வேலைக்கு  செல்வோர், வெளியூரிலிருந்து வரும் வாகனங்கள் தாமதமாக செல்கின்றன. இந்த  திட்டத்தை  செயல்படுத்துவதற்கு மேலும் அவகாசம் கொடுக்க வேண்டும் என வாகன  ஓட்டிகள் தெரிவித்தனர்.  மேலும், தற்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால்  பாஸ்டேக் உள்ள வாகனங்களுக்கு தனி லைன் அமைக்க வேண்டும்  என  கோரிக்கை  வைத்துள்ளனர்.

 அதேபோல், பாஸ்டேக் திட்டமானது வாடகை ஓட்டும்  தினக்கூலிகளுக்கு ஏற்றது அல்ல என வாடகை வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டினர்.  இதனால் பாஸ்டேக் இல்லாமல் வரும் வாகனங்களுக்கு கட்டணம்  செலுத்த தனி லைன்  ஏற்படுத்தி ரொக்கமாக கட்டணம் பெற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதேபோல் மதுராந் தகம் அருகே ஆத்தூர், செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளுக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன  ஓட்டிகள் சிரமங்களை சந்தித்து வரும்நிலையில், பாஸ்டேக் கட்டாய உத்தரவு வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Pastack ,Staff drivers ,country ,toll booths ,Passengers , ‘Pastack’ came into effect from midnight across the country: Staff drivers at toll booths argue..traffic congestion; Passengers suffer
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!