×

குழந்தைகளை குரங்குகள் தூக்கிச்சென்றது உண்மையா? போலீஸ், வனத்துறை விசாரணை தீவிரம்

தஞ்சை: தஞ்சையில் குழந்தைகளை குரங்குகள் தூக்கிச்சென்றதாக கூறப்படுவதில் சர்ச்சை எழுந்துள்ளது. தஞ்சை மேலஅலங்கம் அகழி கோட்டை தெருவை சேர்ந்தவர் ராஜா(29). இவரது மனைவி புவனேஸ்வரி(26). இவர்களுக்கு சமீபத்தில் இரட்டை பெண் குழந்தை பிறந்தது. கடந்த 13ம் தேதி மதியம் வீட்டில் புகுந்த குரங்குகள் இரட்டை குழந்தைகளை தூக்கிச்சென்று ஒரு குழந்தையை வீட்டின் மேற்கூரையிலும், மற்றொரு குழந்தையை அகழியிலும் வீசின. அகழியில் வீசப்பட்ட குழந்தை நீரில் மூழ்கி இறந்தது. இதுபற்றி தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குரங்குகளை பிடிக்க வனத்துறையினர் அகழி பகுதியை சுற்றி கூண்டுகள் வைத்தனர். இதில் 20 குரங்குகள் நேற்று சிக்கின. தொடர்ந்து கூண்டுகளை வைத்துள்ளனர். பிடிப்பட்ட குரங்குகளை திருச்சி பச்சமலை பகுதியில் விட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குரங்குகள் குழந்தைகளை தூக்கி செல்ல வாய்ப்பில்லை என தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட வனத்துறை அலுவலர் இளையராஜா கூறுகையில், குழந்தைகளை குரங்குகள் தூக்கி கொண்டு சென்றதாக கூறப்படும் நிலையில் முதற்கட்ட விசாரணை முடிந்துள்ளது. இதில் குரங்கு குட்டிகளின் எடை 400 முதல் 500 கிராம் தான். குட்டிகளை குரங்கு தூக்கி கொண்டு செல்லும்போது குட்டியை தாய் குரங்கு பிடித்து இருக்காது. குட்டி தான் தாயை இறுக்கமாக பிடித்து இருக்கும்.

குரங்குகள் தூக்கி சென்றதாக கூறப்படும் குழந்தைகளின் எடை 1.5 கிலோ இருக்கும். அப்படி இருக்கும்போது குரங்குகள் மேற்கூரை ஓட்டின் வழியாக இறங்கி 3 அடி உயரமுள்ள சுவர் வழியாக ஏறி செல்ல வாய்ப்பு இல்லை. அப்படி குரங்குகள் தான் குழந்தையை தூக்கி சென்றது என்றால் குழந்தைகளின் உடலில் சிறு காயங்கள் கூட இல்லை என்பதை மருத்துவர்கள் பரிசோதனையில் உறுதிப்படுத்தியுள்ளனர். இறந்த குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என்றார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, குழந்தையை குரங்கு தூக்கி சென்ற சம்பவத்தில் முதற்கட்டமாக குரங்குகள் குழந்தைகளை தூக்கி சென்றுவிட்டது என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் விசாரணை வேறு கோணத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.

Tags : children ,Forest Department , Baby, monkeys
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...