×

முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க கேரளா முட்டுக்கட்டை

கூடலூர்: முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில் அணையில் 142 அடி தண்ணீர் தேக்க 2014 மே 7ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதே ஆண்டு நவ.21, 2015 டிசம்பர் 7ல் அணையில் 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டது. பருவமழை ஏமாற்றியதால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அணைநீர்மட்டம் 136 அடியைக்கூட எட்டவில்லை. பின் 2018 ஆகஸ்ட் 16ல் அணையின் நீர்மட்டம் 142 அடியை தாண்டியது. அன்று ஒருநாளில் 1.6 டிஎம்சி தண்ணீர் உபரிநீராக இடுக்கி அணைக்கு சென்றது.

கேரளாவில் அதே மாதம் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மீண்டும் பெரியாறு அணையில் 142 தண்ணீரை தேக்குவதற்கு இடையூறாக கேரள அரசு பொய் பரப்புரைகளை வெளியிட்டதோடு, முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்புக்கு தமிழக அரசு வகுத்துள்ள விதிமுறைகள் மிகவும் பழமையானவை. மக்களின் பாதுகாப்பு கருதி அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

முல்லை பெரியாறு விவகாரத்தில் அணையின் நீர்மட்டத்தை குறைத்து உத்தரவிட முடியாது என அது தொடர்பான அனைத்து இடைக்கால மனுக்களையும் உச்சநீதிமன்றம் கடந்த இருநாட்களுக்கு முன் தள்ளுபடி செய்தது. இவ்வழக்கில் தாங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிட்டாது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டுதான் கேரள அரசு, பெரியாறு அணையில் ‘ரூல்கர்வ்’ நடைமுறையை கொண்டுவர மத்திய நீர்வள ஆணையத்திடம் வலியுறுத்தி வந்துள்ளது.

ரூல்கர்வ் நடைமுறைப்படுத்தப்பட்டால் பருவமழை காலங்களில் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த முடியாது. ரூல்கர்வ் அட்டவணைப்படி அணையின் நீர்மட்டம் 140 அடியாக இருக்கும்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி என்றால் தமிழக பகுதிக்கு அதிகபட்சமாக 4 பென்ஸ்டாக் பைப்புகள் மூலம் 1600 கனஅடி, இறைச்சல்பாலம் வழியாக 800 கனஅடி என வினாடிக்கு 2400 கனஅடி தண்ணீர் மட்டுமே வெளியேற்ற முடியும். மீதமுள்ள 7400 கனஅடி தண்ணீர் உபரிநீராக 13 மதகுகள் வழியே இடுக்கி அணைக்கு திறந்து விடப்படும். இது தொடர்பாக கேரள அரசு, மத்திய நீர்வள ஆணையத்திற்கு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே கடந்த ஜனவரி 19ல் மத்திய நீர்வள ஆணைய இயக்குநர் நித்யானந்த ராய், இணை இயக்குநர் ஐஸ்லி ஐசக் குழுவினர் முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட விவசாய சங்க இணை செயலாளர் கம்பம் ரஞ்சித்குமார் கூறுகையில், ‘பெரியாறு அணையில் 152 அடி தேக்குதை தடுக்கவே கேரளா இந்த ரூல்கர்வ் நடைமுறைக்கு கொண்டுவர துடிக்கிறது. உச்சநீதி மன்றத்தில் தீர்ப்பு பெற்று 7 ஆண்டு ஆகியும் அடுத்த கட்ட நடவடிக்கையான 152 அடி தண்ணீர் தேக்கும் முயற்சியை மத்திய நீர்வள ஆணையம் மேற்கொள்ளாதது வருத்தமளிக்கிறது. அணையில் 152 அடி தண்ணீர் தேக்க நடிவடிக்கை எடுத்தபின்பு, இந்த ரூல்கர்வ் அட்டவனை நடைமுறைப் படுத்தினால்கூட அணையில் 150 அடி அளவில் தண்ணீரை நிலைநிறுத்திக் கொள்ளலாம். தமிழக அரசு உடனடியாக அணையில் 152 அடி தண்ணீர் தேக்குவதற்கான முயற்சி எடுத்து கேரளாவின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும். காலதாமதம் ஆகும் பட்சத்தில் இனி பெரியாறு அணையில் 142 அடி என்பது கூட கனவாகி விடும்’ என்றார்.

ரூல்கர்வ் என்றால் என்ன?

வெவ்வேறு காலநிலைகளின் போது ஒரு நீர்தேக்கத்தில் நிலை நிறுத்தக்கூடிய நீர் அளவு மற்றும் செயல்பாடு அட்டவணையே ரூல்கர்வ் எனப்படுகிறது. இதன்படி அணைப்பகுதிகளில் நிலைநிறுதத்தக்கூடிய தண்ணீரின் அளவு காலநிலைகளின்படி மாற்றி அமைக்கப்படும். பருவமழை காலங்களில் (ஜூன் முதல் அக்டோபர் வரை) நீர்வரத்து அதிகமாக உள்ளபோது அணையின் நீர்மட்டத்தை உச்சபட்ச அளவுக்கு உயர்த்த முடியாது. மார்ச், ஏப்ரல், மே போன்ற கேடைகாலத்தில் உயர்த்தி கொள்ளலாம். இதை நடைமுறைப்படுத்த மத்திய நீர்வள ஆணையத்தின் அனுமதி வேண்டும். காவிரி தொழில்நுட்ப குழுமம் இதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.

Tags : dam ,Mullaperiyaru ,Kerala , mullai periyar
× RELATED முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு...