கேரளாவில் பாஜ வளர்கிறதோ இல்லையோ.. கோஷ்டி சண்டைக்கு குறைச்சலில்ல.. மோடியிடம் பெண் தலைவர் புகார்

திருவனந்தபுரம்: கேரளாவில் பாஜ வளர்கிறதோ இல்லையோ... கோஷ்டி பூசல் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆளாளுக்கு ஒரு கோஷ்டியாக நடமாடி கொண்டிருக்கின்றனர். இது தொடர்பாக பலமுறை கட்சி தலைமைக்கு புகார்கள் பறந்த போதிலும் பலன் இல்லை. சமீபத்தில் கேரளாவுக்கு வந்த பாஜ தேசிய தலைவர் நட்டா, யாரும் கோஷ்டி பூசலில் ஈடுபடக்கூடாது. வரும் சட்டமன்ற தேர்தலில் அனைவரும் இணைந்து பணிபுரிய வேண்டும் என்று அறிவுரை கூறி சென்றார். இருப்பினும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

குறிப்பாக மாநில தலைவர் சுரேந்திரன், மத்திய இணை அமைச்சர் முரளிதரன், முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணதாஸ், கும்மனம் ராஜசேகரன், ஷோபா சுரேந்திரன், ரமேஷ், சுரேஷ் ஆகியோருக்கு இடையேதான் கடும் கோஷ்டி பூசல் நிலவி வருகிறது. இதனால் நொந்து போன மூத்த பெண் தலைவர் ஷோபா சுரேந்திரன் கடந்த சில மாதமாக கட்சிப்பணியில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார். சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கூட பிரசாரத்திற்கு செல்லவில்லை. கட்சி பணியில் ஈடுபட அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும் அவர் மசியவில்லை.

இந்த நிலையில் திடீரென்று டெல்லி சென்ற ஷோபா சுரேந்திரன், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது கேரளா பாஜவில் அரங்கேறி வரும் கோஷ்டி பூசல்கள் குறித்து கூறியதாக தெரிகிறது. இது கேரள பாஜவில் உள்ள மற்ற தலைவர்களுக்கு பெரும் கிலியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கடந்த 14ம் தேதி பிரதமர் மோடி கேரளாவுக்கு வந்தார். அப்போது பாஜ தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போதும் ஷோபா சுரேந்திரன் கோஷ்டி பூசல் குறித்து கூறி உள்ளார். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதி அளித்ததாக தெரிகிறது.

Related Stories:

>