கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மும்முனை போட்டி நிலவும் என காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநில தேர்தல் தேதி இம்மாத இறுதியில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே, 5 மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த முறை மேற்கு வங்கத்தில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பாஜகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனது. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று அரசியல் நிபுணா்கள் கணித்துள்ளனர். இதற்கிடையே, தோ்தலில் ஒன்றிணைந்து போட்டியிட உள்ளதாக இடதுசாரி கட்சிகளும் காங்கிரஸும் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த தலைவரும், காங்கிரஸ் மக்களவை தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இந்தத் தேர்தல் பாஜக மற்றும் டிஎம்சிக்கு இடையிலான சண்டை என்று ஒரு சூழ்நிலை இருந்தது. இருப்பினும், இப்போது காற்று அதன் திசையை மாற்றிவிட்டது. இப்போது, தேர்தல் பாஜக, டிஎம்சி மற்றும் காங்கிரஸ்-இடது இடையே இருக்கும் என்று மக்கள் கூறுவார்கள் என்றார்.
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தோ்தலில் இடதுசாரி கட்சிகளும் காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தோ்தலில் அவை தனித்தனியாகப் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.