ராமர் கோயிலுக்கு நன்கொடை தராதவர்களின் வீடுகள் அடையாளமிடப்படுவது ஜெர்மனி நாஜிக்கள் ஆட்சியை நினைவுபடுத்துகிறது!: குமாரசாமி குற்றசாட்டு

பெங்களூரு: அயோத்தி ராமர் கோயிலுக்கு நன்கொடை அளிக்காதவர்களின் வீடுகள் அடையாளமிடப்படுவது ஜெர்மனி நாஜிக்கள் ஆட்சியை நினைவுபடுத்துவதாக கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் சிவபோகாவில் செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, தாம் சமீபத்தில் அறிந்த சில விஷயங்கள் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட, கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நிதி திரட்டுவதாகவும், நிதி திரட்டும் தன்னார்வலர்கள் பணம் கொடுக்காத வீடுகளின் பெயரை எழுதுகிறார்கள் என்றும், நிதி கொடுத்தவர்களின் வீடுகள் தனியாக அடையாளமிடப்படுவது ஏன் என தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெர்மனியில் நாஜிக்கள் ஆட்சியில் என்ன நடந்ததோ அதே போன்று தான் இங்கும் நடப்பதாக தெரிவித்தார். நாஜிக்கள் பாணியை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் பின்பற்றுவது கவலையளிப்பதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஒருவர் தங்களுடைய கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாத நிலை இந்நாட்டில் நிலவுகிறது. இந்தியாவில் காணப்படுகின்ற இந்த போக்கானது, நம்மை இறுதியாக எங்கு அழைத்து செல்லும் என்பது எனக்கு தெரியாது. இந்த தேசம் அறிவிக்கப்படாத அவசர நிலையின் கீழ் இருக்கிறது என முன்னாள் முதல்வர் குமாரசாமி குறிப்பிட்டார். மேலும், ஊடகத்தினர் அரசுக்கு எதிராகத் தங்கள் குரலை உயர்த்தினால் தங்களுக்கு என்ன நடக்கும் எனத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள் எனவும் குமாரசாமி தெரிவித்தார்.

Related Stories:

>