×

கும்பகோணத்திலிருந்து சீர்காழி வரை 52 கி.மீ தூரம் 4 வழிச்சாலைக்கு நிலம் எடுக்கும் பணி தீவிரப்படுத்த கோரிக்கை: திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி

மயிலாடுதுறை: மயிலாடுதுறையை ஒட்டி கும்பகோணத்திலிருந்து சீர்காழிவரை 4 வழிச்சாலைக்கு மத்திய அரசு திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. ரூ.752 கோடி மதிப்பிலான திட்டத்தை உடனடியாக செயல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டத்தில் உள்ள நகர பகுதிகள் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்து வருகிறது. பெரும்பாலும் கனரக வாகனங்கள் சிதம்பரத்திலிருந்து கும்பகோணத்திற்கு செல்வதற்கு பலமணி நேரம் தாமதமாகிறது. மேலும் கும்பகோணத்திலிருந்து சீர்காழிவரை நவக்கிரக தலங்கள் வரிசைகட்டி நிற்கிறது. மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியே ஓர் ஆன்மீக பகுதியாக உள்ளது. சிவ, வைணவ தலங்களுடன் சைவ திருமடங்கள் என நிறைந்துள்ளதால் பக்தர்களுக்கு இப்பகுதி ஆன்மீக சுற்றுலா தலமாக உள்ளது. கும்பகோணத்திலிருந்து குத்தாலம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன்கோயில், சீர்காழிக்கு செல்வதில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கை. மேலும் பல்வேறு ஊர்களுக்குச் செல்லும் சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளது.

இதனை கருத்தில்கொண்டு தொலைநோக்கு பார்வையில் சீர்காழி புறவழிச்சாலையில் பிரிந்து மயிலாடுதுறைக்கு வடபகுதி வழியாக வயல் வெளிப்பகுதியில் கும்பகோணம் வரை செல்லும் அளவிற்கு 4 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு ‘பாரத்மாலா பரியோஜனா’ திட்டத்தின்கீழ் அதற்கான நிதி ஆதாரமாக ரூ.752 கோடி அனுமதி அளித்துள்ளது. இந்த நான்குவழிச்சாலை சீர்காழி புறவழிச்சாலையிலிருந்து கோவில்பத்து, புங்கனூர், திருப்புங்கூர், கன்னியாக்குடி, கீழமருதாந்தநல்லூர், கொண்டல் கடுவங்குடி, அருள்மொழித்தேவன், மகாராஜபுரம் பண்டாரவாடை, பொன்னூர், கடலங்குடி, நாகமங்கலம், பந்தநல்லூர் குத்தாலம் சாலையின் குறுக்கே, முள்ளுக்குடிகுணதளபாடி, முள்ளுக்குடி, கதிராமங்கலம், கூத்தனூர், கீழசூரியமூலை, கோட்டூர், துகிலி, மணலூர், சூரியனார்கோயில், பருத்திக்குடி, வேப்பத்தூர், திருவிசநல்லூர் பண்டாரவாடை வழியாக கும்பகோணம் புறவழிச்சாலையை அடைகிறது.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ராஜேந்திரன் கூறுகையில், ‘ஆன்மீக சுற்றுலா வரும் வெளிமாவட்ட மாநில பக்தர்களின் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்வதற்கும் மயிலாடுதுறை, குத்தாலம், ஆடுதுறை, திருவிடைமருதூர், திருபுவனம், வைத்தீஸ்வரன்கோவில், சீர்காழி போன்ற ஆன்மீகப் பகுதி நகரங்களுக்குள்ளே செல்வதற்கும் நேர மிச்சத்தை ஏற்படுத்துவதற்கும் அமைக்கப்பட்ட இந்த திட்டம் முற்றிலும் வயல்வெளிப்பகுதிகளில் மட்டுமே செல்கிறது. குறுக்கே செல்லும் சாலைகளின்மேல் மேம்பாலம் கட்டுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. ரயில்வே லைனை கிராஸ் செய்யாமல் செல்கிறது. அனைவருக்கும் ஏற்ற இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணியை தேர்தல் நடைமுறை ஆரம்பிப்பதற்கு முன்பாக தமிழக அரசு துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Tags : Sirkazhi ,Kumbakonam ,Central Government , Demand for intensification of land acquisition for 4 lanes at a distance of 52 km from Kumbakonam to Sirkazhi: Central Government approval for the project.
× RELATED சீர்காழி அருகே 3 வயது சிறுவனை தெரு நாய் கடித்துக் குதறியது