×

தேசதுரோக சட்டத்தின் பெயரால் மாணவர்களை அச்சுறுத்துவது..பிரிட்டிஷ் காலத்தின் அடாவடி : திஷா கைதுக்கு பாஜகவை கிழித்து தொங்கவிட்ட கமல்!

சென்னை : மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, சுவிட்சர்லாந்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் சமீபத்தில் டிவிட்டரில் கருத்து வெளியிட்டார். அத்துடன் வேளாண் சட்டத்துக்கு எதிராக எப்படி போராட வேண்டும் என்ற விவரங்கள் அடங்கிய டூல்கிட் ஒன்றையும் பதிவில் அவர் இணைத்திருந்தார். இதைத் தொடர்ந்து தன்பர்க்கின் டூல்கிட்டில் சில திருத்தம் செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததற்காக  21 வயதான மற்றொரு சூழலியல் ஆர்வலரான திஷா ரவியை டெல்லி போலீஸின் சைபர் பிரிவு கைது செய்துள்ளது. இதனைப் பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து எதிர்ப்பைப் பதிவுசெய்துவருகின்றனர்.

அந்த வகையில் மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசனும் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “மாணவர்களின் மீது அரசியல் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது. மாணவர்களின் தாக்கம் அரசியலில் இருப்பதே நியாயம். அடக்குமுறைகளுக்கு அடிபணியாத நெஞ்சுரத்துடன் நமது மாணவர்கள் இந்த சர்வாதிகாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும். பொதுநலனுக்காகப் போராடும்போதெல்லாம் தேச துரோக சட்டத்தின் பெயரால் மாணவர்களை அச்சுறுத்துவது பிரிட்டிஷ் ஏகாதிபத்திய காலத்தின் அடாவடி.

அது இன்னும் தொடர்வது அவமானம். இந்த அச்சுறுத்தல் சட்டத்தின் மீது ஒரு பொது விவாதம் நிகழ்ந்தே ஆக வேண்டும். கல்லூரி மாணவி, சூழியல் அக்கறையாளர் திஷா ரவியை கடுமையான வழக்குகளில் கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தேசதுரோகம் எனும் பெயரில் மாற்றுக்கருத்துக்களின் குரல்வளையை நெரிப்பது, ஜனநாயகம் அளித்திருக்கிற கருத்துரிமைக்கு எதிரான கொடுஞ்செயல்” எனக் கடுமையாக மத்திய அரசை விமர்சனம் செய்திருக்கிறார்.

Tags : British ,Kamal ,arrest ,Disha ,BJP , திஷா கைது
× RELATED பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல…...