×

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சுற்றுப்புற வளாகத்தில் குளம்போல் தேங்கி கிடக்கும் கழிவுநீர்: தொற்றுநோய் பரவும் அபாயம்

திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையை சுற்றி குளம்போல் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. திருவாரூரில் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையானது கலெக்டர் அலுவலகம் பின்புறத்தில் இயங்கி வருகிறது. இங்கு வெளிநோயாளிகளாக தினந்தோறும் 800க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்லும் நிலையில் உள்நோயாளிகளாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி நாகை மாவட்டத்திலிருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்கு வரும் நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுமட்டுமின்றி இங்குள்ள மருத்துவ கல்லூரியில் ஆண்டு ஒன்றுக்கு 100 மாணவர்கள் வீதம் 500 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கான விடுதிகள் மற்றும் மருத்துவர்களுக்கான வீடுகள் போன்றவையும் இருந்து வருகிறது.

இவை அனைத்திலிருமிருந்து நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான லிட்டர் கழிவுநீர் வெளியேறும் நிலையில் இந்த கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய சுத்திகரிப்பு நிலையம் ஒன்றும் இருந்து வருகிறது. ஆனால் இந்த சுத்திகரிப்பு நிலையமானது செயல்பாடு இல்லாததன் காரணமாக மருத்துவமனையின் அனைத்து கட்டிடங்களிலிருந்தும் வெளியேறும் கழிவுநீர் ஆங்காங்கே குளம் போல் தேங்கி நிற்கிறது. இதில் குறிப்பாக இந்த மருத்துவமனையின் பிரசவ வார்டு அருகே இதுபோன்ற கழிவுநீர் தேங்கி நிற்பதால் பச்சிளம் குழந்தைகளுக்கு விரைவில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவமனையை சுற்றி தேங்கியிருக்கும் கழிவுநீரினை உடனடியாக அகற்றி விட வேண்டும் என பொதுமக்களும், நோயாளிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thiruvarur Government Medical College Hospital , Sewage stagnant in the vicinity of Thiruvarur Government Medical College Hospital: Risk of contagion
× RELATED திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி...