தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் டாஸ்மாக் மதுபான கடை திறக்க அதிகாரிகள் முடிவு: பொதுமக்கள் எதிர்ப்பு

தஞ்சை: தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் டாஸ்மாக் மதுபான கடை திறக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தஞ்சை புதிய பேருந்து நிலையம் மாநகராட்சி 51வது வார்டில் அமைந்துள்ளது. பேருந்து நிலையத்திற்கு வெளியில் 3 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. மேலும் சுமார் 1 கி.மீ. தொலைவில் ஒரு டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்தின் உள்ளே சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட மாநகராட்சி கடைகளில் ஒன்றில் டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்பட உள்ளது. ஏற்கனவே கடந்த ஓர் ஆண்டுக்கு முன் அந்த இடத்தில் டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்பட இருந்தது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அத்திட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் அதே இடத்தில் டாஸ்மாக் மதுபான கடை திறக்க அதிகாரிகள் உதவியுடன் ஆளுங்கட்சியினர் காய்நகர்த்தியுள்ளனர். இவ்விடத்தில் டாஸ்மாக் மது கடை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் பேருந்து நிலையத்தின் உள்ளே மதுபான கடை திறந்தால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. மேலும் பேருந்து நிலையத்தின் அடுத்ததாக மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பேருந்து நிலையத்தில் வந்திறங்கியும், இங்கிருந்து பேருந்து ஏறியும் தான் சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் பேருந்து நிலையத்தின் உள்ளேயே டாஸ்மாக் மதுபான கடை திறந்தால் மாணவ, மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

மேலும் பேருந்து நிலையத்தில் சட்டவிரோத செயல்களும், சமூக விரோத நடவடிக்கைகளும் அதிகரித்து விடும் என சமூக ஆர்வலர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள், ஓட்டல்கள் அருகருகே இருக்கும் நிலையில் அதன் இடையே டாஸ்மாக் மதுபான கடை இருந்தால் மற்ற கடைகளின் வியாபாரம் பாதிக்கும் என வணிகர்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே அனைத்து தரப்பினருக்கும் கடும் நெருக்கடியை தரும் டாஸ்மாக் மதுபான கடையை இவ்விடத்தில் திறக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே மாவட்ட கலெக்டர் இங்கு டாஸ்மாக் மதுபான கடை திறக்க அனுமதிக்க கூடாது என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories:

>