நெல்லையில் லோடு ஆட்டோ கால்வாயில் கவிழ்ந்ததில் 5 பெண்கள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது : மு.க.ஸ்டாலின்

சென்னை : நெல்லை மாவட்டம், சீவலப்பேரியை அடுத்த மணப்படை வீடு அருகே திருமலை கொழுந்துபுரம் மற்றும் மணக்காடு ஆகிய கிராமங்களில் இருந்து தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் அருகே உள்ள சவரிமங்கலம் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் உளுந்தம் செடி பிடுங்குவதற்காக விவசாய கூலி வேலைக்காக ஒரு லோடு ஆட்டோவில் 31 பேர் புறப்பட்டனர்.புதியம்புத்தூர் செல்லும் வழியில் வாஞ்சி மணியாச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு மேற்கே 200 மீட்டர் தூரத்தில் ‘எஸ்’ வளைவில் திரும்பும் போது, லோடு ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள பாலத்தில் மோதியது. இதில் லோடு ஆட்டோ நிலை தடுமாறி ஓடை தண்ணீரில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் இறந்தனர். 26 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில், லோடு ஆட்டோ கால்வாயில் விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:

நெல்லையிலிருந்து விவசாயப் பணிக்காகச் சரக்கு வாகனத்தில் சென்ற பெண் தொழிலாளர்கள் 5 பேர் மணியாச்சி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

சாலைப் பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்படும் நிலையில் பாதுகாப்பற்ற பயணங்களை மேற்கொள்ளும் சூழலுக்குத் தள்ளப்படும் ஏழைத் தொழிலாளர்களின் அவல நிலை தொடர்கிறது.  

உயிரிழந்த பெண் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டைத் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்! எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>