×

உடுமலை ரயில்வே சுரங்கப்பாதை கழிவுநீர் தேங்கி சாக்கடையானது: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

உடுமலை: உடுமலை பெரியார் நகர் பகுதியிலிருந்து பழனி ஆண்டவர் நகர் பகுதிக்கு செல்லும் வகையில் ரயில்வே சுரங்கப்பாதை ஒன்று உள்ளது.இந்த பாதையை ஜீவா நகர்,காந்தி புரம்,தாண்டவன்காடு தோட்டம் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகளைச் சேர்ந்த மக்கள் நீண்ட நாட்களாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த சுரங்கப்பாதையில் சாக்கடைக்கழிவு நீர் தேங்குவதும் அதை மோட்டார் மூலம் அப்புறப்படுத்துவதும் நீண்ட நாட்களாக தொடர்கதையாக நடந்து வருகிறது.
இங்கு  ஒரு நாள் சாக்கடை நீரை வெளியேற்றாவிட்டால் அதிக அளவில் கழிவு நீர் தேங்கி விடும்.இதனால் அவ்வப்போது  பொதுமக்கள் கழிவுநீரில் இறங்கிச்செல்லும் நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து உடல் அரிப்பு மற்றும் பல்வேறு நோய்த் தொற்றுகளால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.எனவே இந்த பகுதியில் கழிவு நீர் மற்றும் மழைநீர் தேங்காத வண்ணம் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக பிரச்னையை கண்டு கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்ட நகராட்சி நிர்வாகத்தின் செயல் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது நீண்ட நாட்களாக இந்த சுரங்கப்பாதையில் தேங்கும் கழிவு நீர் அப்புறப்படுத்தாமல் அங்கேயே தங்கியிருக்கிறது.இதனால் இந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.அத்துடன் கொசு உற்பத்தி அதிகரித்து அருகிலுள்ள குடியிருப்பு வாசிகள் அவதிப்படும் நிலை உள்ளது. மேலும் பல்வேறு நோய்த் தொற்றுகளும் ஏற்படும் அபாயம் உள்ளது.அதுமட்டுமல்லாமல் இங்கு அதிக அளவில் கழிவுநீர் தேங்கியிருப்பதால் அருகிலுள்ள குடியிருப்புகளைச் சேர்ந்த சிறுகுழந்தைகள் உள்ளே இறங்கினால் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது.எனவே இந்த சுரங்கப்பாதை வழியாக ஒட்டுமொத்தமாக முடங்கியுள்ள போக்குவரத்துக்கு தீர்வு காணவும்,சுகாதார சீர்கேடுகளைக் களையவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Udumalai ,motorists ,suffering , Udumalai railway tunnel sewer stagnant: motorists, public suffering
× RELATED உடுமலை நகராட்சி கூட்டத்தில் உபரி பட்ஜெட் தாக்கல்