×

உலக வர்த்தக அமைப்பின் முதல் பெண் தலைவராக நைஜீரிய முன்னாள் நிதியமைச்சர் ஒகோன்ஜோ இவீலா தேர்வு..!!

அபுஜா: உலக வர்த்தக அமைப்பின் முதல் பெண் தலைவராக நைஜீரியா நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் நிகோஸி ஒகோன்ஜோ இவீலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ஆப்பிரிக்க கண்டதை சேர்ந்த முதல் நபர் என்ற பெயரையும் இவர் பெற்றுள்ளார். 1995ம் ஆண்டு உருவாக்கப்பட்ட உலக வர்த்தக அமைப்பு, சர்வதேச நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், ஏற்றுமதி வரி உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தி வருகிறது. 164 உறுப்பினர்களை கொண்ட உலக வர்த்தக அமைப்பின் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணிகள் அண்மையில் நடைபெற்றன.

நைஜீரியா நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் நிகோஸி ஒகோன்ஜோ இவீலா மற்றும் தென்கொரிய வர்த்தகத்துறை அமைச்சர் யு மியங் -ஹீ ஆகியோர் இதற்கான போட்டியில் இருந்தனர். இந்நிலையில் உலக வர்த்தக அமைப்பின் தலைவராக நிகோஸி ஒகோன்ஜோ இவீலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் உலக வர்த்தக அமைப்பின் தலைவர் பதவியில் அமரும் முதல் ஆப்பிரிக்க மற்றும் முதல் பெண் என்னும் சிறப்பை நிகோஸி ஒகோன்ஜோ இவீலா பெற்றுள்ளார். கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உலகளாகிய பொருளாதாரம் மற்றும் சுகாதார விளைவுகளில் கவனம் செலுத்தி உலகளாவிய பொருளாதாரம் மீண்டும் அதன் வழியில் பயணிப்பதை உறுதி செய்வதே தனது முதன்மை பணி என நிகோஸி ஒகோன்ஜோ இவீலா தெரிவித்துள்ளார்.

மேலும், எங்கள் அமைப்பு பலவிதமான சவால்களை எதிர்கொண்டுள்ளது. அதேசமயம், அனைவரும் இணைந்து செயல்படுவதன் மூலம், இந்த அமைப்பை வலுப்படுத்தி நடைமுறை உலகின் எதார்த்தத்திற்கு ஏற்ப இந்த அமைப்பை மாற்றிக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது 66 வயதாகும் நிகோஸி ஒகோன்ஜோ இவீலா, மொத்தம் 164 நாடுகளுடைய பிரதிநிதிகளால் இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Okonjo Ivila ,Nigerian ,World Trade Organization , World Trade Organization, First Female President, Okonjo Evila
× RELATED நைஜீரிய தீவிரவாதிகள் கடத்திய 300 பள்ளி மாணவர்கள் விடுவிப்பு