×

திஷா கைதான நிலையில் மேலும் 2 பேருக்கு பிடிவாரண்ட் ‘டூல்கிட்’ விசாரணையில் ‘திடுக்’ தகவல்கள்: டெல்லி போலீசார் பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி: விவசாயிகள் போராட்டம் தொடர்பாக சர்ச்சைக்குரிய ‘டூல்கிட்’ விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பெங்களூருவின் 21 வயது திஷா ரவி கைதான நிலையில் மேலும் 2 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, சுவிட்சர்லாந்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் சமீபத்தில் டிவிட்டரில் கருத்து வெளியிட்டார். அத்துடன் ‘டூல்கிட்’ ஒன்றையும் அவர் இணைத்திருந்தார். போராட்டங்கள் நடத்தும்போதும் அதில் பங்கேற்பவர்கள் செய்யவேண்டிவை குறித்து ‘டூல்கிட்’ உருவாக்கப்பட்டு சமூகவலைதளங்களில் பகிரப்படுவது வழக்கம்.
தன்பர்க் பகிர்ந்த டூல்கிட்டில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பதிவுகள் மூலம் ‘டிவிட்டர் புயல்’ உருவாக்குவது, போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது, அதானி,அம்பானி போன்ற பெரு முதலாளிகளுக்கு எதிராக செயல்படுவது, அரசு அதிகாரிகள் மற்றும் அரசை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களுக்கு விவசாயிகள் போராட்டம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் கோரிக்கை வைப்பது, இந்தியத் தூதரகம், ஊடக நிறுவனம் அல்லது உள்ளூர் அரசு அலுவலகம் ஆகியவற்றின் அருகே போராட்டம் நடத்துவது உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்த டூல்கிட் இந்தியாவில் உள்ள மக்களால் புதுப்பிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டிருந்த தன்பர்க், பின்பு அதை தமது டிவிட்டரில்  இருந்து நீக்கி விட்டார். ஆனால் இந்த டூல்கிட் இந்திய அரசுக்கு எதிராக செயல்பட விரும்பும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் சதி என்றும் கிரெட்டா தன்னுடைய பதிவு மூலம் காலிஸ்தான் பிரிவினைவாதத்தை தூண்டும் சதித்திட்டத்தில் ஈடுபட்டார் என்றும் டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய டெல்லி போலீசார் நேற்று முன்தினம் பெங்களூருவில் 21 வயதான சுற்றுச்சூழல் ஆர்வலரான திஷா ரவியை கைது செய்தனர். இவர் தன்பர்க்கின் டூல்கிட்டில் சில திருத்தம் செய்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இவரை 5 நாள் காவலில் எடுத்து டெல்லி போலீசார் விசாரிக்கின்றனர். திஷா ரவி கிரெட்டா தன்பர்க்கின் பிரைடேஸ் ஃபார் பியூச்சர் என்ற பருவநிலை அமைப்பின் இந்திய துணை நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய நிகிதா ஜேக்கப், சாந்தனு என்ற மேலும் இருவருக்கும் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட்டை டெல்லி போலீஸ் பிறப்பித்துள்ளது. மும்பையில் இவ்விருவரையும் தேடும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

விசாரணை குறித்து டெல்லி போலீசார் கூறுகையில், ‘‘சாந்தனு, திஷா இருவரும் டூல்கிட்டை உருவாக்கி உள்ளனர். ஜேக்கப் அதை எடிட்டிங் செய்துள்ளார். குடியரசு தின வன்முறைக்கு முன்பாக, இந்த டூல்கிட் உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு, சாந்தனு, நிகிதா ஜோசப் இருவரும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பான பிஎப்ஜே உடன் ஜூம் மீட்டிங்கில் கலந்து கொண்டுள்ளனர். அந்த கூட்டம் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகிறது. திஷா ரவி தான் டூல்கிட், கிரெட்டா தன்பர்க்குக்கு டெலிகிராம் ஆப் மூலமாக அனுப்பி வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வாட்ஸ்அப் குரூப் ஒன்றையும் உருவாக்கி இருந்தார். ஆனால் பின்னர் திஷா அந்த குரூப்பை நீக்கி உள்ளார். கிரெட்டா பகிர்ந்த டூல்கிட்டில் இருந்த குற்ற நடவடிக்கை எடுக்கத் தகுந்த தகவல்கள் வெளியில் கசிந்ததால்தான் திஷா, அதை நீக்குமாறு கிரெட்டாவிடம் கூறி உள்ளார்’’ என்று கூறியுள்ளனர். இந்த விவகாரம் தேசிய அரசியலிலும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே சாந்தனு மும்பை நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
திஷா ரவியின் கைதுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ‘உங்கள் உதடுகள் பேசுவதற்கான சுதந்திரம் கொண்டவை. உண்மையை உயிருள்ளவரை பேசுங்கள். அவர்கள் அச்சப்படட்டும். இந்தியா மவுனமாக இருக்காது’ என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். ‘இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்’ என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், ‘‘அரசின் கொள்கைகளை விமர்சிப்பதற்காக ஒருவர் கைது செய்யப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது’’ என்றார்.

Tags : Disha ,arrests , Disha arrest warrant for 2 more arrested in Dishak
× RELATED வெளிநாட்டு மாடல் கையில் திஷா பதானியின் டாட்டூ