×

புதிய மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் இயந்திரம் கோளாறு: பயணிகள் அவதி

சென்னை: வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே புதிதாக திறக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் நீட்டிப்பு வழித்தடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நேற்று முன்தினம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த வழித்தடங்களில் பணிகள் சரிவர முடிக்கப்படாமல் அவசர கதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், நேற்று வழக்கம் போல் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை காலை முதல் இயங்க தொடங்கியது. ஆனால், காலை 6 மணி முதலே சேவையில் பல்வேறு பிரச்னை எழுந்தது. சுங்கச்சாவடி மெட்ரோ ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டர் மற்றும் தானியங்கி டிக்கெட் எடுக்கும் இயந்திரங்களில் திடீரென கோளாறு ஏற்பட்டது.

இதனால், முதல்நாளில் ஆர்வமுடன் பயணிக்க வந்திருந்த பொதுமக்கள் டிக்கெட் எடுக்க முடியாமல் திணறினர். பின்னர், மேனுவல் டோக்கன் எனப்படும் காகித பயணச்சீட்டுகளில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் கைகளில் எழுதி கொடுத்தனர்.
இதேபோல், தியாகராயர் கல்லூரி மெட்ரோ ரயில் நிலையத்தில் தானியங்கி கண்ணாடி கதவுகள் செயல்படாமல் அப்படியே நின்று போனதாகவும் பயணிகள் புகார் தெரிவித்தனர். மேலும், ஒளி பலகை மற்றும் தானியங்கி ஒலிப்பெருக்கிகளும் சில நிலையங்களில் வேலை செய்யவில்லை. இதனால், ரயில் வரும் நேரம் தெரிந்துகொள்ள முடியாமல் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தேர்தல் நெருங்கும் நிலையில் மெட்ரோ ரயில் சேவையை அவசர கதியில் திறந்ததே இதுபோன்ற பிரச்னைகளுக்கு காரணம் என பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்

Tags : stations ,Passengers , Ticket engine malfunction at new metro stations: Passengers suffer
× RELATED நீலகிரியில் 176 பதற்றமான...