திருத்தணி அருகே குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

திருத்தணி: திருத்தணி அருகே குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. திருத்தணி அடுத்த வேலஞ்சேரி அம்பேத்கர் காலனி மற்றும் அம்பேத்கர் நகர் உள்பட பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலானவர்கள் விவசாய வேலை உள்பட பல பணிகள் செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், சில நாட்களாக சரிவர குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர். தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஊராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை திரண்டு திருத்தணி - நாகலாபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது. தகவலறிந்த போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட மக்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

Related Stories:

>