×

கொரோனா விதிகளை பின்பற்றாத பள்ளிகளுக்கு 50 ஆயிரம் அபராதம்: சிபிஎஸ்இ அறிவிப்பு

சென்னை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் மார்ச் 1ல் தொடங்க உள்ளதை அடுத்து, கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அந்த பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், எழுத்து தேர்வுகள் மே 4ம் தேதி தொடங்கி ஜூன் 10ம் தேதி வரை நடக்கும்.  

அவர்களுக்கான அகமதிப்பீடுகள் செய்முறைகள் மூலம் மதிப்பெண்கள் வழங்கப்படும். அந்த  செய்முறைத் தேர்வுக்கான தேதியையும்  தற்போது சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதன்படி மார்ச் 1ம் தேதி முதல் செய்முறைத் தேர்வுகள் தொடங்கும். ஜூன் 11ம் தேதியுடன் முடிவடையும். இந்த செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட்ட உடனே அந்தந்த பள்ளிகள் அதற்கான மதிப்பீடுகளை உடனடியாக சிபிஎஸ்இ இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். செய்முறைத் தேர்வுகளை நடத்தவும், மேற்பார்வையிடவும் அனுமதிக்கப்பட்டுள்ள வெளி பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகளுக்கு வரவழைத்து தேர்வுகளை நடத்த வேண்டும்.

முறைகேடுகள் நடந்தால் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை வைத்து தான் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். தற்போது கொரோனா தொற்று நீடித்து வருவதால், செய்முறைத் தேர்வின் போது ஒரு பிரிவில் 25 மாணவர்கள் என்று பிரித்து தேர்வுகளை நடத்த வேண்டும். செய்முறைத் தேர்வுக்கு வரும் மாணவ, மாணவியர் ெகாரோனா நோய்த் தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும். கண்டிப்பாக அவர்கள் முகக் கவசம் அணிந்து வருவதை பள்ளி நிர்வாகத்தினர் உறுதி செய்ய வேண்டும். கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் இருந்து மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அந்த பள்ளிகளுக்கு 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.


Tags : Schools ,CBSE ,Corona , Corona, Penalty, CBSE, Notice
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...