×

பிப். 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய 3 நாட்கள் தென்மாவட்டத்தில் ராகுல்காந்தி பிரசாரம்: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: ராகுல்காந்தி வருகிற 27, 28, மார்ச் 1 ஆகிய 3 நாட்கள் தென்மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நேற்று அளித்த பேட்டி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூன்றாம் கட்டமாக வருகிற 27, 28, மார்ச் 1 ஆகிய 3 நாட்கள் தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 3 நாட்கள் மக்களோடு கலந்து ராகுல் பேசுகிறார். பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார். விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர், மீனவர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரோடு கலந்துரையாட இருக்கிறார். ராகுலுக்காக மொத்தம் 5 கட்ட பிரசாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு வந்தார். 2வது முறையாக மேற்கு மாவட்டத்திற்கு  வந்திருக்கிறார். 3வது முறையாக தெற்கு மாவட்டத்திற்கு வருகிறார். அதன்  பிறகு டெல்டா மாவட்டம், வடக்கு மாவட்டம், சென்னையை சுற்றி என்று  அவரது பிரசாரப் பயணம் இருக்கும். பிரியங்கா காந்தியும் பிரசாரத்திற்காக தமிழகம் வருகிறார். தேவேந்திர குல வேளாளர்களின் கோரிக்கையை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பதிவு செய்து இருக்கிறார். எங்களுக்கு அதில் மகிழ்ச்சி. டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்திருக்கிறது. விலை உயர்வை எதிர்த்து மார்ச் மாதத்தில் தமிழக காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெறும்.

விரைவில் நாங்களும் தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து மனுக்களை வாங்க இருக்கிறோம். பாஜ தலைவர் எல். முருகன், வர உள்ள தேர்தல் தேச பக்தர்களுக்கும், தேச விரோதிகளுக்கான தேர்தல் என்று பேசியிருக்கிறார். இதை கேட்டால் சிரிப்பாக வருகிறது. யார் தேசபக்தர்கள்? யார் தேச விரோதிகள்?. ஜனசங்கம், பாஜ தலைவர்கள் எவராவது விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று ஒரே ஒரு நாள் சிறைக்கு சென்றதுண்டா?. தேசபக்தர்களின் சங்கமமாக இருக்கிற இந்திய தேசிய காங்கிரசை விமர்சனம் செய்வதற்கு எல்.முருகனுக்கு என்ன தகுதியிருக்கிறது?. கடன் தள்ளுபடி மூலம் ஆளுங்கட்சியினர் விவசாயிகள் பெயரில் மிகப்பெரும் தொகை கடன் ரத்து மூலம் சலுகை அடைந்துள்ளனர்.  இது குறித்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : campaign ,Rahul Gandhi ,KS Alagiri , Rahul Gandhi, Propaganda, KS Alagiri, Interview
× RELATED சொல்லிட்டாங்க…