×

விலை உயர்வு தொடர்ந்தால் விரைவில் 100ஐ நெருங்கும்: உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலை

சென்னை: தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை நேற்று புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நாளுக்கு நாள் வேகமெடுக்கும் விலை உயர்வால் விரைவில் 100ஐ தொடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதத்திற்கு இரு முறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வந்ததது.

ஆனால் இப்போது அவை தினமும் என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் அவற்றின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் மக்கள் தாங்க முடியாத விலை உயர்வை சந்திக்கும் என்பதால், தொடரும் இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
நாடு முழுவதும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, கடந்த ஆண்டு மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் அதன் பின்பு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

எதிர்கட்சியினரின் போராட்டம், பீகார் மாநில தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு கடந்த ஜனவரியில் இருந்து மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயரத் தொடங்கியுள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள், தொழில் முனைவோர் என அனைத்து தரப்பினரும் பெரும் பாதிப்பை சந்திக்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று முன்தினம் விலையில் 23 காசுகள் உயர்ந்து, 91 ரூபாய் 19 காசுகளாக விற்பனையானது. டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து, 84 ரூபாய் 44 காசுகளாக விற்பனையானது. இந்த விலை உயர்வு நேற்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை வாகன ஓட்டிகளை கலக்கம் அடையச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Petrol, diesel, prices, increase
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்...