சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரமாண்ட உதயசூரியன் சின்னம் அமைத்து உலக சாதனை முயற்சி: மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,  சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக, பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அதனடிப்படையில், இன்று (16ம் தேதி)  கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தை மக்களின் மனதில் ஆழப் பதிய செய்யும் நோக்கிலும், உலக சாதனை புத்தகத்தில் உதயசூரியன் சின்னத்தை இடம்பெற செய்யும் விதமாகவும், 6,000 இளைஞர்கள் உதயசூரியன் வடிவில் நின்று, ‘ஹியூமன் இமேஜ் ஆப்  ரைசிங் சன்’  என்கிற தலைப்பில், உலக சாதனை படைக்க உள்ளனர். இச்சாதனையில், மலை போல் வடிவில் 2 ஆயிரம் பேரும், சூரியன் வடிவில் 1,500 பேரும், 5 பெரிய  கதிர் வடிவில் தலா 300 பேர் என 1,500 பேரும், 4 சிறிய கதிர் வடிவில், தலா 250 பேர் என மொத்தம் 6000 பேர் நிற்க உள்ளனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும், சைதை சட்ட மன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘‘இந்த உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற உள்ளது. அதிமுகவின் மக்கள் விரோத நடவடிக்கையில்தான் திமுக வெற்றி பெறப் போகிறது. கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, 6 லட்சத்து 70 ஆயிரம் குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கினார். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு ஒருவருக்கு கூட பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. தற்போது திமுக தேர்தல் பரப்புரையை, ஜனநாயக ரீதியாக தலைவர் தொடங்கியுள்ளார்.இவ்வாறு அவர்  தெரிவித்தார்.

Related Stories:

>