×

பிரதமர் மோடியை வரவேற்பதற்காக தொண்டர்களை அழைத்து வர கட்சி கொடுத்த பணத்தில் 10 லட்சம் சுருட்டல்: அதிமுக மாவட்ட செயலாளர் மீது பரபரப்பு புகார்

சென்னை: பிரதமர் மோடியை வரவேற்பதற்காக தொண்டர்களை அழைத்து வர கட்சி தலைமை கொடுத்த பணத்தில் ரூ.10 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டதாக அதிமுக மாவட்ட செயலாளர் மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது. தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நேற்று முன்தினம் (ஞாயிறு) சென்னை வந்தார். அவரை வரவேற்க அதிமுக சார்பில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. முன்னதாக சென்னையில் உள்ள 8 அதிமுக மாவட்ட செயலாளர்கள் அதிகளவில் தொண்டர்களை அழைத்து வந்து பிரதமருக்கு வரவேற்பு அளிக்க வேண்டும் என்று கட்சி தலைமை உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தொண்டர்களை அழைத்து வர கட்சி தலைமை கொடுத்த ரூ.20 லட்சம் பணத்தில் தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் அசோக் ரூ.10 லட்சத்தை தனது சொந்த செலவுக்கு எடுத்துக்கொண்டதாக பகுதி செயலாளர் ஒருவர் கட்சி தலைமைக்கு புகார் அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து வேளச்சேரி அதிமுக பகுதி செயலாளர் எம்.ஏ.மூர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுப்பியுள்ள புகார் கடிதத்தில் கூறி இருப்பதாவது: தமிழகம் வருகை தந்த பிரதமர் மோடியை சென்னை விமான நிலையத்தில் வரவேற்கும் வகையில் அதிமுக தலைமை உத்தரவிட்டிருந்தது.

அதன்படி தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம் சார்பில் 10 ஆயிரம் பேரை அழைத்து வருவதாக கூறி மாவட்ட செயலாளர் எம்.ேக.அசோக் தலைமையிடம் ரூ.20 லட்சம் பெற்றுக் கொண்டார். அதன்படி வேளச்சேரி பகுதிக்கு உட்பட்ட 12 வட்ட செயலாளரிடமும் தலா 200 பேரை அழைத்து வர உத்தரவிட்டார். இதேபோல் மயிலாப்பூர் பகுதியிலும் சேர்த்து மொத்தம் 5 ஆயிரம் பேர் என ஒரு நபருக்கு ரூ.200 வீதம் கொடுத்தார். இதன்மூலம் ரூ10 லட்சம் மட்டுமே செலவு செய்துள்ளார். மீதும் உள்ள ரூ.10 லட்சம் பணத்தை தனது தேவைகளுக்கு பயன்படுத்தி கொண்டார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி கோபம்
தமிழகம் வந்த பிரதமருக்கு சுமார் ஒன்றரை லட்சம் பேர் வரை திரண்டு வரவேற்பு கொடுக்க சென்னையில் உள்ள 8 அதிமுக மாவட்ட செயலாளருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தாராம். இதற்காக அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் பல லட்சம் ரூபாயை கட்சி தலைமையே வழங்கியதுடன், பஸ், வேன், காரும் ஏற்பாடு செய்து கொடுத்தது. ஆனால், பிரதமரை வரவேற்க 50 ஆயிரம் பேர் கூட வரவில்லையாம். பிரதமர் சென்ற பாதையில் அதிமுக கொடியை விட பாஜ கொடி தான் அதிகளவில் காணப்பட்டுள்ளது.

இதனால் கோபம் அடைந்த முதல்வர் எடப்பாடி, நேற்று முன்தினம் இரவு 8 மாவட்ட செயலாளர்களையும் வீட்டுக்கு வரவழைத்து கண்டித்துள்ளார். கட்சி தலைமை பணம் கொடுத்தும், ஆட்களை திரட்ட முடியவில்லை. பணத்தை நீங்களே வைத்துக் கொண்டீர்கள். இனிமேல் உங்களை நம்பப்போவதில்லை, நேரடியாக வட்ட செயலாளரிடமே பணத்தை கொடுத்து விடுகிறேன். இப்படி இருந்தால், வரும் தேர்தலில் அதிமுக எப்படி வெற்றிபெறும் என்று முதல்வர் கடும் கோபம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Modi ,party ,volunteers ,district secretary ,AIADMK , Prime Minister Modi, AIADMK, complained
× RELATED கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் கைதை...