×

ஈரோடு மேற்கு, காங்கயம்: தொகுதிகளை குறிவைக்கும் தமாகா: அதிமுகவினர் அதிருப்தி

அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் 20 சீட்டுகள் ஒதுக்க வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தி வருகிறது. மேலும், தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்றும் கூறி வருகிறது. ஆனால், அதிமுக தலைமை 6 சீட்டுகள் வரை கொடுப்பதற்கு முன்வந்துள்ளதோடு இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என நிர்ப்பந்திக்கிறது. இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே புகைச்சல் நீடித்துள்ள நிலையில், மேற்கு மண்டலத்தில் தமாகாவுக்கு ஒரு தொகுதி மட்டும் ஒதுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு ஒதுக்கினால் ஈரோடு மேற்கு தொகுதியை கேட்டுப்பெற தமாகா காய் நகர்த்தி வருகிறது.

ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட தமாகா மாநில செயலாளர் விடியல்சேகர் தீவிரம் காட்டி வருகிறார். இதேபோல், இளைஞரணி தலைவர் யுவராஜாவும் சீட் பெற துடிக்கிறார். ஏற்கனவே, ஈரோடு மேற்கு தொகுதியில் யுவராஜா போட்டியிட்டு தோல்வியடைந்ததாலும், சீனியர்கள் பலர் உள்ளதாலும் இம்முறை வாய்ப்பு கிடைக்காது என கட்சியினர் கூறுகின்றனர். ஈரோடு மேற்கு கிடைக்காவிட்டால் காங்கயம் தொகுதியை கைப்பற்றவும் முடிவு செய்துள்ளனர். விடியல் சேகர் ஏற்கனவே காங்கயம் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். அந்த அடிப்படையில் காங்கயம் தொகுதியை சாய்ஸில் வைத்துள்ளனர். காங்கயம் தொகுதி தற்போது அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசுவிடம் உள்ளது.
இவர், சசிகலா ஆதரவு நிலைப்பாடு எடுத்தால் எளிதில் காங்கயம் தொகுதியை பெற்றுவிடலாம் என தமாகா கணக்கு போட்டு வருகிறது.

அதேவேளையில், அதிமுகவில் பொள்ளாச்சி விஐபியும் காங்கயத்தை குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு பொள்ளாச்சி விஐபிக்கு ஒதுக்கப்பட்டால் ஈரோடு மேற்கு தொகுதியை கேட்டு பெற்றுவிடலாம் என தமாகா கருதுகிறது. தமாகாவின் இந்த நிலைப்பாட்டால் சிட்டிங் தொகுதியை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. இது அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : constituencies ,Kangayam ,Tamaga ,AIADMK , Tamaga, AIADMK, dissatisfaction
× RELATED பொய் மட்டுமே பேசி வரும் மோடியை...