×

குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்ட காமராஜர்

வேலூர் மாவட்டத்தில் உள்ள மிக முக்கிய தொகுதி குடியாத்தம் (தனி) தொகுதி. தற்போது, இது தனித்தொகுதியாக இருந்தாலும் 2001க்கு முன்பு வரை இது பொது தொகுதியாக இருந்தது. அதோடு, 1951 முதல் 1961 வரை இந்த தொகுதி இரட்டை பிரதிநிதிகள் கொண்ட தொகுதியாக இருந்தது.
தமிழக முதல்வராக இருந்த ராஜகோபாலாச்சாரி, குலக்கல்வி திட்டத்தால் மக்களின் அதிருப்திக்கு ஆளானார். இதனால், நேரு அவரை பதவி விலகக்கூறியுள்ளார். பின்னர் தனது அமைச்சரவையில் இருந்த சி.சுப்பிரமணியத்தை முதல்வர் பதவிக்கு முன்மொழிந்தார். இதனை, அப்போது, காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த காமராஜர் தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை.  எம்.எல்.ஏவாக இல்லாத காமராஜரை முதல்வராக முன்மொழிந்து முதல்வர் பதவியை 1953ல் ஏற்றுக்கொண்டார்.

பின்னர் எம்.எல்.ஏவாக வேண்டுமென்று, இரட்டை பிரதிநிதிகள் கொண்ட தொகுதியாக இருந்த குடியாத்தம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ வாக இருந்த அருணாச்சலம் முதலியாரை ராஜினாமா செய்ய வைத்து 1954ல் குடியாத்தம் தொகுதியில் வேட்பாளராக நின்றார் காமராஜர். அவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி கோதண்டராமன் நின்றார். காமராஜருக்கு திமுக ஆதரவளித்தது. குடியாத்தத்துக்கும், காமராஜருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அங்கே போட்டியிட  வேண்டாம் என்று பலரும்  காமராஜருக்கு கூறியுள்ளனர். ஆனால், காமராஜர் மறுத்துவிட்டார். தேர்தலில் கிராமம் கிராமமாகச்சென்று மக்களிடம் பேசினார். திறந்த ஜீப் ஒன்றை ஏற்பாடு செய்து அதில் நின்று கொண்டே தெருக்களில் ஊர்வலமாக சென்று வாக்குகளை சேகரித்தார். அந்த தேர்தலில் காமராஜர் பெரும் வெற்றி பெற்றார். காமராஜர் முதலமைச்சராக தொடர்ந்து நீடிப்பதற்கு குடியாத்தம் தொகுதி வெற்றி முக்கிய காரணமாக அமைந்தது.

Tags : Kamaraj ,Gudiyatham ,constituency , Gudiyatham, Kamaraj
× RELATED திருச்செந்தூர் நகராட்சியில்...