×

தேர்தல் களம்

இந்த தொகுதி புளிக்கும்...வேற தொகுதி தாங்கப்பா!

மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளில், நகரின் முக்கிய பகுதிகளை உள்ளடக்கியதாக மதுரை வடக்கு தொகுதி இருக்கிறது. பீபீ குளம், கோ.புதூர், டிஆர்ஓ காலனி, ரேஸ்கோர்ஸ் காலனி, கோரிப்பாளையம், மீனாட்சிபுரம், கே.கே.நகர். அண்ணா நகர், மானகிரி, மேலமடை, ஆயுதப்படை குடியிருப்பு, மாட்டுத்தாவணி உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளை கொண்டிருக்கிறது. 2016 சட்டமன்ற தேர்தலில், இத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரசை சேர்ந்த கார்த்திகேயன், அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா போட்டியிட்டனர். இதில் ராஜன் செல்லப்பா வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். இத்தொகுதியில் அரசு அதிகாரிகள், ஊழியர்கள், போலீசார் அதிகம் உள்ளனர். படித்த இளைஞர்கள் அதிகம் உள்ளனர். இவர்களுக்கென வேலைவாய்ப்பு திட்டங்கள் வகுக்கப்படும் என்ற எம்எல்ஏவின் வாக்குறுதி எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

கண்மாயை தூர்வாரலை...

தேர்தலின்போது, 620 ஏக்கர்  பரப்பிலான வண்டியூர் கண்மாய் ஆழப்படுத்தப்படும். இங்கு  தமிழன்னை சிலை நிறுவி  சுற்றுலா தலமாக்கப்படும். செல்லூர் கண்மாயும் ஆழப்படுத்தப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசியிருந்தார். கோரிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து  நெரிசல் தீர்க்க மேம்பாலம் கட்டுவதாகவும் உறுதி அளித்திருந்தார். இவைகளில் எதையுமே செய்யவில்லை. குடிநீர் விநியோகம்,  குண்டு, குழி சாலைகள் சீரமைப்பு என எம்எல்ஏ அள்ளித்தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு தொகுதியெங்கும் ஓங்கி ஒலிக்கிறது. தொகுதிக்குள் பெருகியுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. பந்தல்குடி கால்வாயை சீரமைக்காததால் கழிவுநீர் ஓடி, சுகாதாரச் சீர்கேடு, துர்நாற்றம், கொசுக்கடியும் மக்களை அவதிப்படுத்துகிறது. ‘‘அனுபவம்மிக்க அரசியல்வாதி. ஓட்டுப் போட்டால் தொகுதிக்கு செய்வார்னு எதிர்பார்த்தோம். தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கணும்... அங்கே போய்ருவேன். இங்கே போய்ருவேன்னு தலைமைக்கு செக் வைக்குறதில்தான் குறியா இருந்தாரே தவிர, தொகுதிக்கு பெரிதாக எதுவுமே செய்யலை... இதனால இம்முறை இங்க போட்டி போட்டா ஜெயிக்க மாட்டோம்னு தெரிஞ்சுகிட்டு, வேறு தொகுதியை தேடிக்கிட்டிருக்காருங்க....’’ என்கின்றனர் தொகுதி மக்கள்.

‘குடிநீர் வசதிகள் செய்திருக்கிறேன்’

மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ, ராஜன் செல்லப்பா கூறும்போது, ‘‘வடக்கு தொகுதிக்கான மேம்பாட்டு நிதியின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் 11 கோடிக்கு சாலை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். தார், பேவர் பிளாக் சாலைகள் தெருக்கள்தோறும் போட்டுக் கொடுத்துள்ளேன். தமுக்கம், பனகல்சாலை உள்ளிட்ட 4 பகுதிகளில் முன்னுதாரணமாக குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறைகள் கட்டிக் கொடுத்துள்ளேன். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளாண்ட் தொகுதிக்குள் 10 இடங்களில் அமைத்துத் தரப்பட்டுள்ளது. தொகுதி தன்னிறைவு பெறும் விதத்தில், மனநிறைவுடன் பணி செய்துள்ளேன்’’ என்கிறார்.

‘தொகுதி மக்களை காலி செய்ய வைத்தவர்’

காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திகேயன் கூறும்போது, ‘‘தொகுதியின் நீராதாரமான வண்டியூர் கண்மாயை முறையாக சீரமைத்து, தூர்வாரி தண்ணீர் தேக்கவில்லை. இதனால் நிலத்தடி நீரின்றி சுற்றுவட்டார மக்களில் பலர் வீடுகளை காலி செய்து வெளியேறி விட்டனர். செல்லூர் கண்மாயையும் சீரமைக்கவில்லை. தொகுதிக்குள் உள்ள எக்கோ, ராஜாஜி பூங்காக்கள் பாழடைந்து போயிருக்கிறது. மீனாட்சிபுரம் உள்ளிட்ட பல கால்வாய்களில் மழைநீருடன் சாக்கடை கலந்து நரிமேடு உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து மக்கள் பாதித்து வருகின்றனர். கரும்பாலை பகுதியினர் எனக்கு அதிக வாக்களித்ததால், அங்கே குடிநீர், சாலை என எந்த வேலையுமே நடக்கவில்லை’’ என்கிறார்.

அக்கறை காட்டாத தொகுதி எம்எல்ஏ - சுந்தரி கோபி, சமூக ஆர்வலர், பட்டாபிராம்

தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. இங்கு, வட இந்தியர்களுக்கு வேலையில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. சமீபத்தில், நெய்வேலி மின் நிலையத்தில் 1,350 பொறியாளர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில், 15 பேர் மட்டும் தமிழர்கள் உள்ளனர். மீதி உள்ளவர்கள் வட மாநிலத்தைச் சார்ந்தவர்கள். கொரோனா தொற்று நோய் தாக்கம் குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் ரயில்களில் அலுவலக நேரங்களில் ஆண் பயணிகள் பயணம் செய்ய தடை நீடிக்கிறது. இதனால் அவர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்த அரசு முடிவு செய்து உள்ளது. இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகும்.

ஆவடியில், கடந்த 2009ல் திமுக ஆட்சியில் முதல்வராக இருந்த கலைஞர் ₹380கோடி செலவில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி சென்றார். ஆனால் இதுவரை அந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் 12 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் கிடக்கிறது. மேலும், ஆவடி பகுதியில் உள்ள பல ஏரிகள் தூர்வாரப்படாமல் உள்ளன. இதனால் கோடை காலத்தில் நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்பட்டு குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதோடு மட்டுமில்லாமல், ஆவடி மாநகராட்சி பகுதியில் 2016ம் ஆண்டு வர்தா புயலில் உடைந்து விழுந்த தெரு மின் விளக்குகள் பல ஆண்டுகளாக சரி செய்யப்படாமல் உள்ளன. இதனால், இரவு நேரங்களில் மாநகராட்சி பகுதி முழுவதும் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. தொகுதி எம்.எல்.ஏவும், அமைச்சருமான பாண்டியராஜன் ஆவடி மக்களின் வளர்ச்சியில் அக்கறை காட்டவில்லை. இதனால், ஆவடி தொகுதியில் அதிமுகவை புறக்கணிப்போம்.

Tags : Election field
× RELATED நடிகை ராதிகா போட்டியிட்ட விருதுநகர்...