×

நாலா பக்கம் !

பிராந்திய கட்சிகள் ஜொலிக்காதது ஏன்?

பல்வேறு இனங்களும், குழுக்களும் கொண்ட மாநிலமாக அசாம் உள்ளது. கிட்டத்தட்ட வேற்றுமையில் ஒற்றுமை பேசும் குட்டி இந்தியாவைப் போல்தான். அசாம் மொழி பேசுகிறவர், அகோம் இனத்தவர், கோச் ராஜ்போன்சிஸ் குழு, வங்காள மக்கள், தேயிலைத்  தொழிலாளர்கள், பல்வேறு இஸ்லாமியர்கள், ஜார்க்கண்ட் பழங்குடியினர், இந்தி பேசுகிறவர்கள் என்று கூட்டாஞ்சோறு பாணியில் எல்லோரும் கலந்திருப்பதால், அசாமில் அரசியல் செய்வது இடியாப்பச் சிக்கலாகவே உள்ளது. இதனால்தான் ஒற்றை இலக்கை முன் வைத்து பிராந்திய கட்சிகள் அசாமில் கால் பதிக்க முடியாமல் தடுமாறுகின்றன. அசாமிலுள்ள பெரும்பான்மையான மக்களும் உள்ளூர் கட்சிகளை ஓரளவுக்கு மேல் நம்புவதில்லை. நமக்கு தேசிய அளவில் சக்தி மிக்க ஒரு கட்சியின் ஆதரவு தேவை என்றோ அல்லது மத்தியில் ஆளும் கட்சியே நமக்குப் பாதுகாப்பு என்றோ முடிவு செய்துவிடுகிறார்கள்.

மம்தாவுக்கு புது தலைவலி

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில், திரிணாமுல் காங்கிரசை வீழ்த்த அக்கட்சியின் முக்கிய தலைவர்களை வளைத்து பாஜ குடைச்சல் கொடுத்து வருகிறது. இதுபோதாதென்று அம்மாநில முதல்வர் மம்தாவுக்கு புது தலைவலி வந்துள்ளது. கடந்த 11ம் தேதி வேலைவாய்ப்பு கோரி கொல்கத்தாவில் சட்டபேரவை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளின் இளைஞர் அமைப்பினர் பங்கேற்றனர். இதில், வழக்கம் போல் மேற்கு வங்க போலீசார் பயங்கர தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டினர். இந்த சம்பவத்திற்கு பின் படுகாயத்துடன் மீட்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் இளைஞர் அமைப்பான டிஒய்எப்ஐ உறுப்பினர் மைதுல் இஸ்லாம் மிட்டா என்பவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.  இது பெரும் அரசியலாக்கியுள்ளது. மம்தா ஆட்சியில் போராட்டம் நடத்துபவர்களை போலீசார் அடித்து கொன்று விடுவதாக கம்யூனிஸ்ட் குற்றம்சாட்டுகிறது. இதெல்லாம் கொஞ்சமும் சரியில்லை என பாஜவும் கண்டனம் தெரிவித்துள்ளது. போராட்டத்தில் இளைஞர்களும், கட்சியினரும் போலீசாரை தாக்கியதால்தான் இந்த துரதிஷ்டவசமான சம்பவம் நடந்ததாக திரிணாமுல் கூறுகிறது.

உறுதியற்ற நிலையில் தொகுதி அறிவிப்பு?

கேரளாவில் அமைந்துள்ள 14வது சட்டப்பேரவையின் பதவிக்காலம் ஜூன் 1ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், இங்கு வரும் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கூட்டணிக்குள் குழப்பம், கட்சி தாவல் என வழக்கமாக அரங்கேறும் தேர்தல் கள காட்சிகள் கேரளாவிலும் அரங்கேறி வருகிறது. அங்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணியில் இடம் பெற்றுள்ள ஜோஸ் கே. மாணி தலைமையிலான கேரளா காங்கிரஸ் (எம்) கடந்த முறை 11 தொகுதிகளில் போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இம்முறை கூட்டணியில் 13 தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தலைமை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  அதிலும், கோட்டயத்தில் மட்டும் கடந்த முறை போட்டியிட்டு தோல்வியுற்ற பலா, பூஞ்சார், கஞ்சிராபள்ளி, செங்கனாசேரி, கடுதுருதி, ஈட்டுமனூர் உள்ளிட்ட 6 தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளது. கேட்கும் 13 சீட்களே கிடைக்குமா என்று தெரியாத நிலையில், கோட்டயத்தில் மட்டும் 6 தொகுதிகள் கிடைக்குமா என்பது உறுதி அல்ல என்று கூட்டணி வட்டாரங்களே முணுமுணுக்கின்றன.

பாஜவினரை விரட்டிய ஊர் மக்கள்

புதுவையில் சட்டமன்ற தேர்தலில் வென்று எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட  வேண்டுமென்பதில் பாஜ கங்கனம் கட்டி கொண்டு பணியாற்றுகிறது. தீவிர உறுப்பினர்  சேர்க்கை, காங்கிரசுக்கு எதிராக போராட்டம், மாற்றுக் கட்சி விஐபிக்களை  இழுத்தல் உள்ளிட்ட வேலைகளை  மேற்கொண்டு வருகிறது. இதனிடையே வில்லியனூர்  தொகுதிக்கு உட்பட்ட கொம்பாக்கத்தில் சில தினங்களுக்கு முன் பாஜகவினர்  கட்சிக் கொடியேற்ற சென்றனர். இதற்கு அங்குள்ள ஊர்மக்கள் திரண்டு எதிர்ப்பு  தெரிவித்தனர். யார் வேண்டுமானாலும் கட்சி மாறட்டும், அது எங்களுக்கு  பிரச்னை இல்லை எனக்கூறி தடை போட்டனர். இதை பாஜவினர் ஏற்க மறுத்த  நிலையில் இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றியது. இருப்பினும் ஊர்மக்களின்  வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு பிரச்னையை கைவிட்டு பாஜகவினர் அங்கிருந்து  நடையை கட்டினர்.

Tags : POLITICS
× RELATED சொல்லிட்டாங்க…