×

தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: திமுக சார்பில் போட்டியிட பிப்.17 முதல் விருப்ப மனு: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வரும் 17ம் தேதி முதல் 24-ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார். தமிழகத்தில்  சட்டமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ளதால் திமுக, அதிமுக உள்பட அனைத்துக்கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. கூட்டணி அமைப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறது.

மார்ச் முதல் வாரம் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பிறகு எந்த திட்டங்களையும் செயல்படுத்த முடியாது என்பதால் ஆளும் தரப்பினர் அரசு பணிகளை விரைந்துமுடிக்க உத்தரவிட்டுள்ளனர். சில இடங்களில் முடிவடையாத பணிகளையும்  இந்த மாதத்திற்குள் திறக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெறுகிறது.

இந்த நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெறவிருக்கும் தமிழ்நாடு-புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கு கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் 17-02-2021  புதன்கிழமை முதல் 24-02-2021 புதன்கிழமை வரை தலைமைக்கழகத்தில் விண்ணப்பித்திட வேண்டுகிறேன்.

தமிழ்நாடு-புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தொகுதிக்கான விண்ணப்பக் கட்டணம்:
பொதுத்தொகுதி- ரூ.25,000
மகளிர்க்கும் மற்றும் தனித்தொகுதிக்கும்- ரூ.15,000

வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தவர்கள் கூட்டணியின் தோழைமைக் கட்சிகளுக்கென பகிர்ந்து கொள்ளப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருப்பின் அவர்களது விண்ணப்பக் கட்டணம் பின்னர் திரும்பித் தரப்படும்.  விண்ணப்படிவம் தலைமைக்கழகத்தில் ரூ.1000 வீதம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஐக்கிய ஜனநாயக கட்சி,  மதிமுக, சமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் உள்ளது.

அதிமுக விருப்ப மனு:

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்ற  பேரவை பொதுத்தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்ற தொண்டர்கள், சென்னை  ராயப்பேட்டையில் உள்ள தலைமைக்கழக அலுவலகத்தில் வருகின்ற 24ம் தேதி (புதன்) முதல் மார்ச் 5ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு விண்ணப்ப படிவங்களை பெறலாம்.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், விண்ணப்ப கட்டணமாக ரூ.15 ஆயிரம் செலுத்தி மனு வாங்கலாம். புதுச்சேரி மாநிலத்துக்கு ரூ.5 ஆயிரமும் கேரளா மாநிலத்துக்கு ரூ.2 ஆயிரமும் கட்டண தொகை செலுத்தி விருப்ப  மனு விண்ணப்ப படிவங்களை பெறலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது. தற்போது, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, தேமுதிக, பாமக, தமாகா, சமக உள்ளிட்ட கட்சிகள் உள்ளது.


Tags : Tamil Nadu ,Duraimurugan ,DMK ,Announcement , Tamil Nadu, Pondicherry Assembly Election: Petition to contest on behalf of DMK from Feb.17
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...