×

முழுவீச்சில் இயங்கும் அரசு அலுவலகங்கள், கல்லூரிகள்: பாசஞ்சர் ரயில்கள் மீண்டும் இயக்கப்படுமா?..பயணிகள் எதிர்பார்ப்பு

நெல்லை: கொரோனா பரவல் வேகம் வெகுவாக குறைந்துவரும் நிலையில் அரசு அலுவலகங்கள், கல்லூரிகள் முழுமையாக இயங்குவதால் அவர்களது நலன் கருதி பாசஞ்சர் ரயில்கள் அனைத்தையும் மீண்டும் உடனடியாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் இருந்து கொரோனா பரவல் காரணமாக 144 தடை உத்தரவு நீடிக்கிறது. கடந்த செப்டம்பர் வரை முழுமையாக தடை உத்தரவு அமலில் இருந்தது. தொடர்ந்து படிப்படியாக கொரோனா பரவல் குறைந்து வருவதால் தடைகள் ஒவ்வொன்றாக விலக்கப்பட்டு வருகின்றன.

நிபந்தனைகளுடன் கூடிய சில தடைகள் அமலில் இருந்தாலும் மக்கள் இயல்பு வாழ்க்கையை மீண்டும் வாழ்கின்றனர். சமூகஇடைவெளி எங்கும் காணமுடியவில்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை 98 சதவீதம் பேர் பின்பற்றுவதாகத்தெரியவில்லை. அதே நேரத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகம் இல்லை. ஆயினும் குறைந்த பட்சஅளவில் பரவல் நீடிக்கிறது. இந்த நிலையில் மத்திய மாநில அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்குகின்றன. கல்வி நிறுவனங்களும் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.

உயர்கல்வித்துறையில் அனைத்து கல்லூரிகளும் முழுமையாக திறக்கப்பட்டு வழக்கமாக வகுப்புகள் நடைபெறுகின்றன. இதுபோல் 9,10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறுகின்றன. வகுப்புகள் நடைபெறும் அதே நேரத்தில் மாணவர்களுக்கு பெரிய அளவில் கொரோனா பரவல் இல்லை. இதனால் அடுத்த கட்டமாக 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை நேரடியாக நடத்தலாமா என ஆலோசித்து வருகின்றனர். இதனிடையே அரசு, தனியார் அலுவலகங்கள், கல்லூரி, பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டதால் பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. பஸ்கள் மட்டுமே முழு அளவில் இயங்கும் நிலையில் பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படவில்லை. அலுவலர்கள், மாணவர்கள் பாசஞ்சர் ரயில்களில் வழக்கமாக சீசன் டிக்கெட்டுகளை எடுத்து பயணிப்பதால் அவர்களுக்கு மாதாந்திர செலவும் குறைவாக இருந்தது.

தற்போது பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படாததால் பஸ்களில் தினமும் அதிக கட்டணம் செலுத்தி பயணிக்கும் நிலை உள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு தினமும் சென்று பணி செய்பவர்களும், பயில்பவர்களும் பாசஞ்சர் ரயிலையே அதிகம் பயன்படுத்துகின்றனர். பஸ்கள் முழுமையாக இயக்கத்தொடங்கி சுமார் 6 மாதம் கடந்த நிலையிலும் குறிப்பிட்ட விரைவு ரயில்கள் மட்டும் சிறப்பு ரயில்களாக இயக்கப்படுகின்றன. இவற்றிலும் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே பயணிக்க முடியும் என்ற நிலை நீடிக்கிறது. எனவே அலுவலகங்கள், கல்விநிறுவனங்களுக்கு செல்பவர்களின் நலன் கருதி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பாசஞ்சர் ரயில்களை இயக்கவும் அவர்களுக்கு சீசன் டிக்கெட் அனுமதி வழங்கவும் மாநில அரசும் தென்னக ரயில்வேயும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

Tags : Government offices ,colleges , Full-fledged Government Offices and Colleges: Will Passenger Trains Re-Run?
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...