×

அண்ணா பஸ் நிலையம் அருகே குடிநீர் குழாய் உடைந்து சாலையில் ஓடும் தண்ணீர்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகர பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க கடந்த 25 வருடத்திற்கு முன்பு முக்கடல் அணையில் இருந்து குழாய் பதிக்கப்பட்டு அந்த குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது நாகர்கோவில் நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு பல ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் நாகர்கோவில் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இதனால் குடிநீர் தேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தற்போது புத்தன்அணை குடிநீர் திட்டபணிக்கு குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. குழாய் பதிக்க தோண்டும்போது பழைய குழாய்கள் உடையும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. மேலும் தண்ணீரின் அழுத்தம் அதிகமாக இருக்கும்போதும் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு வருகிறது.

இதனால் மாநகர பகுதியில் ஆங்காங்கே அடிக்கடி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுகிறது. இதனை மாநகராட்சி ஊழியர்கள் சரிசெய்து வருகின்றனர். தற்போது சில இடங்களில் உடைப்பு ஏற்படும்போது சில நாட்கள் கடந்த பிறகே அதனை சரிசெய்யும் நிலை இருந்து வருகிறது. நாகர்கோவில் வேப்பமூடு ஜங்சனுக்கும் அண்ணா பஸ் நிலையத்திற்கும் இடையே உள்ள கேப் சாலையில் குடிநீர்குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் ஓடும் நிலை இருந்து வருகிறது. இது கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் ஓடி சாலையும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த பள்ளத்தில் விழுந்து செல்லும் நிலை இருந்து வருகிறது. இதனால் பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்பு குடிநீர் உடைப்பை சரிசெய்து, சாலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,bus stand ,Anna , Water running on the road after a drinking water pipe broke near the Anna bus stand
× RELATED திருப்பூர் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பு; பூக்கள் விலை குறைவு