×

மூத்த குடிமக்களுக்கு மீண்டும் இலவச பஸ் பாஸ்: 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் பெற்றனர்

சென்னை: தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் 12 சதவீதம் பேர் முதியோர் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றது. உடல் உபாதைகளுக்கு ஆளாகும் அவர்கள் சிகிச்சைக்காக அடிக்கடி மருத்துவமனைகளுக்கு சென்று வர  வேண்டியுள்ளது. இதனால் பஸ் பயணத்துக்கே ஒரு தொகையை ஒதுக்க வேண்டியதிருப்பதாக வருத்தமடைந்தனர். இதனால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சென்னை மாநகர பஸ்களில் இலவசமாக பயணிக்கும் வகையில் இலவச பஸ் பாஸ்  வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக முதியோர்களுக்கான இலவச பஸ் பாஸ் சென்னையில் நிறுத்தப்பட்டிருந்தது.

 இந்நிலையில், தற்போது சென்னை மாநகரப் பேருந்துகளில் இன்று முதல் இலவசமாக பயணம் செய்வதற்காக பஸ் பாஸ் பெறுவதற்கான டோக்கன்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 21 பணிமனைகள், 19 பேருந்து நிலையங்களில்  இலவச பேருந்து பயண அட்டைகளை முதியவர்கள் பெறலாம். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாதம் ஒன்றுக்கு பத்து வீதம், 6 மாதங்களுக்கு டோக்கன் வழங்கப்படும் எனவும் போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே அடையாள அட்டை பெற்றுள்ளவர்கள் மற்றும் புதியதாக பெற விரும்புபவர்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.mtcbus.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து  கொள்ளலாம். கொரோனா காரணமாக கடந்த 11 மாதங்களாக முடங்கிப் போயிருந்த மூத்த குடிமக்கள் அரசின் அறிவிப்பினால் நிம்மதியடைந்தனர்.இந்நிலையில், இலவச பஸ் பாஸ் வழங்கும் பணி இன்று காலை முதல் தொடங்கியது.  ஏராளமான 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகாமையில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகங்களில் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்கள் வழங்கி இலவச பஸ் பாஸ்களை பெற்றனர்.


Tags : senior citizens , Free bus pass again for senior citizens: Over 60s eagerly received
× RELATED முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குப்பதிவு தொடங்கியது