×

அமித்ஷா உரைக்கு பதிலடி: கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது....அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிரடி பேட்டி.!!!

திருவனந்தபுரம்: கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது என மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தமிழகம், கேரளா,புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில், மாநில கட்சிகளும், தேசிய கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. மத்திய அரசு கொண்டுவந்த திருத்தச் சட்டக்கு நாடு முழுவதும் மிகப் பெரிய எதிர்ப்பு கிளம்பியது.

அந்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பரவ தொடங்கியது. இதனையடுத்து, குடியுரிமை திருத்தச் சட்டத்தை செயல்படுத்தும் பணியை மத்திய அரசு நிறுத்திவைத்திருந்தது. இந்தநிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கொரோனா தடுப்பூசி முகாம் முடிந்தபிறகு குடியுரிமை திருத்தச் சட்டப் பணிகள் தொடங்கும் என்று தெரிவித்தார். இது நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், கொரோனா தடுப்பூசி பணிகள் முடிந்த பிறகு குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அமித்ஷா கூறியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்படாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். சிஏஏ சட்டமாக நிறைவேற்றப்பட்ட பிறகு கேரளாவில் எப்படி அமல்படுத்தாமல் இருக்க முடியும் என்று சிலர் கேட்கின்றனர். நான் சொல்வது என்னவென்றால், கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது என்று தெரிவித்தார். இதனைபோல், மேற்கு வங்க மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்த மாட்டேன் என்று  அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Revenge ,Amit Shah ,Kerala ,Binarayi Vijayan , Revenge for Amit Shah's speech: Citizenship Amendment Act will not be implemented in Kerala .... State Chief Minister Binarayi Vijayan Action Interview. !!!
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...