'மத்திய அரசு ஜனநாயகத்தின் மீது நடத்தியுள்ள நேரடி தாக்குதல்'!: திஷா ரவி கைதுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம்..!!

டெல்லி: விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவிவை கைது செய்திருப்பதன் மூலம் ஜனநாயகத்தின் மீது மத்திய அரசு நேரடி தாக்குதல் நடத்தியிருப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களை திரும்பபெறக் கோரி டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சுவீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் உள்ளிட்ட வெளிநாட்டு பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு சேர்க்கும் வகையில் விண்ணப்பம் ஒன்றை கிரேட்டா தன்பர்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்த விண்ணப்பத்தை பகிர்ந்ததற்காக பெங்களூரை சேர்ந்த 21 வயது சுற்றுச்சூழல் ஆர்வலரான திஷா ரவி உள்ளிட்ட 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் தனது வீட்டில் இருந்த திஷா ரவிவை நேற்று கைது செய்த காவல்துறையினர், அவரை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 5 நாட்கள் அவருக்கு போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இவருக்காக வாதாடுவதற்கு வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்யவில்லை. கைது நடவடிக்கையில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது போன்ற பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. திஷா ரவியின் கைதுக்கு தொடர்ந்து, பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக 21 வயதே ஆன திஷா ரவியை கைது செய்திருப்பது மத்திய அரசு  ஜனநாயகத்தின் மீது நடத்தியுள்ள நேரடி தாக்குதல் எனவும், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது தண்டனைக்குரிய குற்றம் அல்ல எனவும் தெரிவித்துள்ளார். இதேபோல் திமுக எம்.பி கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஒரு ட்விட்டர் பதிவை ரீட்வீட் செய்தது, அதுவும் விவசாயிகளுக்கு ஆதரவு அளித்த பதிவை பகிர்ந்து குற்றம் என்று கூறி கைது செய்யப்பட்டுள்ளது ஜனநாயக விரோதமானது. நான் திஷா ரவிக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். இது கருத்துரிமைக்கு எதிரான தாக்குதல் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>