தமிழக எண்ணெய் வளத்தை தமிழகத்திற்கே சொந்தமாக்க வேண்டும் : வேல்முருகன் வலியுறுத்தல்!!

சென்னை : தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை : தமிழக எண்ணெய் வளத்தை தமிழகத்திற்கே சொந்தமாக்க வேண்டும் என்றும் பெட்ரோல் டீசல் மீதான வரிகளை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

கொரானா காலங்களில் பல்லாயிரம் பேர் வேலையிழப்பு, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக தொடரும் வன்முறைகள், நாட்டின் உற்பத்தி குறைவு என நாடு அபாயத்தின் விளிம்பில் நின்று மூச்சிதிணறிக் கொண்டிருக்கும் இச்சமயத்தில், பெட்ரோல், டீசல், எரிவாயு, வெங்காயம் விலை உயர்வு, நாட்டு மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை மகாராஷ்டிரா, மத்திய பிரதேச மாநிலங்களில் 100 ரூபாயை எட்டியுள்ளது. சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 29 காசுகள் உயர்ந்து 91.19 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேப்போன்று, டீசல் லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து 84.44 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த ஏழே நாட்களில் மட்டுமே பெட்ரோல் விலை ரூ.1.49ம், டீசல் விலை ரூ.1.78ம் உயர்த்தப்பட்டுள்ளது.

வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடையுள்ள மானியமில்லாத சமையல் எரிவாயு, ஒரு மாதத்தில் மட்டும் 75 ரூபாய் உயர்ந்துள்ளது.

இதன்படி, மானியமில்லாத சமையல் சிலிண்டர் விலை ரூ.769 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய அரசின் மோசமான பொருளாதார அணுகுமுறையால், நாட்டு மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் இழப்பில் இயங்குகின்றன  என்ற வழக்கமான பொய் முட்டையை அவிழ்த்து விட்டு, கார்ப்பரேட் முதலாளிகளும், தனது எஜமானர்களுமான அம்பானி, அதானி உள்ளிட்டவர்கள் பாதிக்கப்படக்கூடாது என மோடி அரசு அரசு நினைக்கிறது. அதன் காரணமாகவே, பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வாகும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி குற்றம்சாட்டுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால், போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டு  வருபவர்கள், என்ன செய்வதறியாது தவித்து வருகின்றனர். சேலம், நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில், லாரிகளை இயக்காமல், அதன் உரிமையாளர்கள் முடக்கியுள்ளனர். தொடரும் இந்த நெருக்கடியை சமாளிக்க வாகனங்களின் வாடகையை லாரி உரிமையாளர்கள் உயர்த்தும் பட்சத்தில், காய்கறி உள்ளிட்ட அனைத்துப்பொருட்களின் விலைகளும் உயரும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை விடுக்கிறது.

இந்த பெட்ரோல் விலை உயர்வு பொதுவாக தவிர்த்திருக்கக்கூடியது என்பது ஒரு புறமிருக்க, இவ்வளவு கடும் விலை உயர்வை தமிழக சுமக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால், தமிழகத்தின் பெட்ரோல், டீசல் தேவையில், மூன்றில் ஒரு பங்கு தமிழகத்திலேயே கிடைக்கிறது. குறைந்த பட்சம் இலாபம் உட்பட அதன் அடிப்படை விலை அதிகம் போனால் லிட்டருக்கு 50 ரூபாயை மிஞ்சாது.

தமிழகத்தில் எரிவாயு தேவையில் சுமார் 80 விழுக்காடு, தமிழகத்திலேயே கிடைக்கிறது. தமிழகத்தில் கிடைக்கும் இயற்கை எரிவாயு தமிழக அரசுக்கே சொந்தம் என்ற நிலை ஏற்பட்டால், தற்போது இருக்கும் விலையை விட மலிவான விலையில் இயற்கை எரிவாயு சிலிண்டர், மண்ணின் மக்களுக்கு வழங்க முடியும்.

தமிழகத்தில் காவிரி படுக்கை உள்ளிட்ட எந்த இடங்களிலும், பெட்ரோலோ, எரிவாயுவோ எடுக்க கூடாது என்பது தான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிலைப்பாடு. அதற்கு தடை விதிக்கும் வரை, தமிழகத்தில் எடுக்கப்படும் பெட்ரோல், எரிவாயு உள்ளிட்டவைகளை மண்ணின் மக்களே பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

இதுவே, பெட்ரோல், எரிவாயு விலையை குறைத்து, மண்ணின் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக்கொள்ள மாற்று வழி என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கருதுகிறது.

எனவே, பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை குறைக்க, தமிழக எண்ணெய் வளத்தை தமிழகத்திற்கே சொந்தமாக்க வேண்டும் என்றும் பெட்ரோல் டீசல் மீதான வரிகளை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>