மியான்மரில் சாலையில் வலம் வரும் ஆயுதம் தாங்கிய போர் வாகனங்கள்!: மீண்டும் இணைய சேவை துண்டிப்பு..!!

யாங்கூன்: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் அங்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ஆனால் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி புதிய அரசை ஏற்க மறுத்து கடந்த 1ம் தேதி ஆங் சான் சூகி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது. நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.

மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும், ஐ.நாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து போராட்டத்தை ஒடுக்கும் விதமாக அங்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1.00 மணி முதல் காலை 9.00 மணி வரை, மியான்மரின் இணைய சேவைகளைத் துண்டிக்க வேண்டும் என தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கூறியுள்ளன.

மேலும் நகரின் முக்கிய வீதிகளில் பீரங்கி உள்ளிட்ட ஆயுதம் தாங்கிய வாகனங்கள் வலம்வர தொடங்கியுள்ளன. இதனால் மியான்மரில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. மியான்மரில் இந்த இணையத் தடைக்குப் பிறகு, வழக்கமாக இணைய சேவையைப் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கையில் வெறும் 14 சதவீதம் தான் இருப்பதாக கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

Related Stories:

>