×

அறந்தாங்கி பகுதியில் இயங்கிய அரசு பேருந்துகள் திடீர் நிறுத்தம்

* பணிமனை மூடல் * மக்களின் சிரமத்தை கண்டுகொள்ளாத அரசு

*மக்களின் குரல்

அறந்தாங்கி : அறந்தாங்கி பகுதியில் இருந்து இயங்கிய அரசு பேருந்துகளின் இயக்கத்தை நிறுத்திய போக்குவரத்து துறை, மணமேல்குடி பணிமனையை இழுத்து மூடியதால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.தமிழக அரசின் சார்பில் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வர விரைவு பேருந்துகளையும், அருகே உள்ள நகரங்களுக்கு சென்று வர மொபசல் பேருந்துகளையும், குக்கிராமங்களுக்கு சென்று வர நகரப் பேருந்துகளையும் இயக்கி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகராக அறந்தாங்கி விளங்குகிறது. அறந்தாங்கியை சுற்றிலும் விவசாயிகளும், மீனவர்களும் வசித்து வருகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் சென்னை, திருப்பூர், கோவை, நெல்லை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

அறந்தாங்கி பகுதி மக்கள் பல்வேறு பணிகளின் நிமித்தம் வெளியூர் செல்வதற்கு அறந்தாங்கி பகுதியில் இருந்து நேரடி அரசு பேருந்து வசதிகள் உள்ளன. இவற்றில் பல பேருந்துகளின் இயக்கத்தை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமும், தமிழ்நாடுஅரசு விரைவு போக்குவரத்து கழகமும் நிறுத்தியுள்ளன. பல ஆண்டுகளாக அறந்தாங்கிக்கும் குறிப்பிட்ட நகருக்கும் இணைப்பாக விளங்கிய பேருந்துகளையும் அரசு போக்குவரத்து கழகம் நிறுத்தியுள்ளது.

மணமேல்குடியில் இருந்து சென்னை, நாகுடியில் இருந்து சென்னை, ஆவுடையார்கோவிலில் இருந்து சென்னை, திருப்பதி சென்ற அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துகள் நிறுத்தப்பட்டது. இதேப்போல திமுக ஆட்சி காலத்தில் இயக்கப்பட்ட மீமிசலில்- சென்னை விரைவு பேருந்தும் நிறுத்தப்பட்டது.

அனைத்து அரசு விரைவு பேருந்துகளும் இயக்கப்பட்ட காலத்தில் அறந்தாங்கியில் இருந்து சென்னைக்கு 4 ஆம்னி பேருந்துகளே இயக்கப்பட்டன. ஆனால் தற்போது தினசரி 8 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் அறந்தாங்கி வழியாக பிற மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டனஇந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டதால், அறந்தாங்கி பகுதி மக்கள் தாங்கள் செல்லக் கூடிய பகுதிகளுக்கு பல பேருந்துகள் மாறி மாறி செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறந்தாங்கி பகுதி மக்களை வஞ்சிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த திமுக ஆட்சியில் மணமேல்குடியில் தொடங்கப்பட்ட அரசு போக்குவரத்துக் கழக பணிமனை கடந்த சில மாதங்களுக்கு முன் மூடப்பட்டது. திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்ற காரணத்திற்காகவே மணமேல்குடி பணிமனையை மூடியதாக கூறும் பொதுமக்கள் அதன்பிறகு அறிவிக்கப்பட்ட ஆலங்குடி, இலுப்பூர், கந்தர்வகோட்டை பனிமனைகள் மட்டும் செயல்பாட்டிற்கு வந்தது எப்படி என கேள்வி எழுப்புகின்றனர்.

அறந்தாங்கி பகுதி மக்களின் நலன், அப்பகுதியின் தொழில்வளர்ச்சி போன்றவற்றை மனதில் கொண்டு அறந்தாங்கி பகுதியில் நிறுத்தப்பட்ட விரைவுப் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து பேருந்துகளையும் விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மூடப்பட்ட மணமேல்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனையை உடனே திறக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : stop ,area ,Aranthangi , Aranthangi: The Department of Transport has stopped the operation of government buses plying from Aranthangi area to Manamelkudi workshop.
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு